Swiggy: ஸ்விக்கியில் டெலிவரி செய்ய முஸ்லீம் வேண்டாம் என குறிப்பிட்ட நபர் - வைரலாகும் போஸ்ட்!
Swiggy: ஸ்விக்கியில் உணவு டெலிவரி செய்வதற்கு முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவரை நியமிக்க வேண்டாம் என ஒருவர் குறிபிட்ட சம்பவம் மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உணவு டெலிவரி செய்வதற்கு முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவரை நியமிக்க வேண்டாம் என ஸ்விக்கி வாடிக்கையாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து உணவுக்கு மதம் உண்டா என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
முஸ்லிம் வேண்டாம்:
ஹைதராபாத்தில் ஸ்விக்கி வாடிக்கையாளர் ஒருவர், உணவை ஆர்டர் செய்துள்ளார். மேலும் அதன் ஆர்டர் குறிப்பில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவரை, டெலிவரி செய்ய நியமிக்க வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தையடுத்து ஹைதராபாத்தைச் சேர்ந்த சைக் சலாவுதீன் என்பவர், ஸ்விக்கி வாடிக்கையாளர் குறிப்பிட்ட குறிப்புகளை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், டெலிவரி செய்யக்கூடிய நாங்கள் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம், சீக் என அனைத்து மதத்தினருக்கும் டெலிவரி செய்து வருகிறோம். இது போன்ற அசம்பாவித நிகழ்வுகள் மீது ஸ்விக்கி நிறுவனம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். ஆனால் இதுவரை ஸ்விக்கி நிறுவனத்திடமிருந்து எந்த பதிலும் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.
Dear @Swiggy please take a stand against such a bigoted request. We (Delivery workers) are here to deliver food to one and all, be it Hindu, Muslim, Christian, Sikh @Swiggy @TGPWU Mazhab Nahi Sikhata Aapas Mein Bair Rakhna #SareJahanSeAchhaHindustanHamara#JaiHind #JaiTelangana pic.twitter.com/XLmz9scJpH
— Shaik Salauddin (@ShaikTgfwda) August 30, 2022
முதல் முறையல்ல:
இது போன்ற மதத்தை வைத்து உணவு டெலிவரி ஆப்களில் சர்ச்சைகள் ஏற்படுவது, இதுதான் முதல் முறை என்றால், இல்லை என்றே கூறப்படுகிறது. இதற்கு முன்னரும் ஹைதராபாத்தை சேர்ந்தவர், ஸ்விக்கியில் உணவு டெலிவரி செய்ய, முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் சென்ற போது, உணவை வாங்க வாடிக்கையாளர் ஒருவர் மறுத்துள்ளார் என்றும் செய்திகள் வெளியானது. அவர் தெரிவித்துள்ள உணவு டெலிவரி குறிப்பில் காரம் குறைவாகவும், டெலிவரி செய்ய தயவு செய்து இந்து மதத்தைச் சேர்ந்தவரை நியமியுங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். அதை பொறுத்தே ரேட்டிங் கொடுப்பேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்விக்கியில் மட்டுமில்லை:
உணவு டெலிவரியில் ஸ்விக்கியில் மட்டும் நடக்கிறதா என்றால், இல்லை. சொமேட்டாவிலும் இது போன்ற சம்பவங்களும் நடந்திருக்கிறது. அந்த தருணத்தில் சொமேட்டோ நிறுவனத்தின் சிஇஓ தீபிந்தர் கோயல் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். அதில் இந்தியாவில் இருக்கும் பன்முகத்தன்மை குறித்து நாங்கள் பெருமை கொள்கிறோம். மேலும் எங்களின் வாடிக்கையாளர் மற்றும் பார்ட்னர்களின் பன்முகத்தனமை மதிப்பு குறித்தும் பெருமை கொள்கிறோம். அந்த மதிப்பிற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும், இதனால் எங்கள் தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் கவலையில்லை என்றும் கடந்த 2019 ஆண்டு தெரிவித்திருந்தார்.
We are proud of the idea of India - and the diversity of our esteemed customers and partners. We aren’t sorry to lose any business that comes in the way of our values. 🇮🇳 https://t.co/cgSIW2ow9B
— Deepinder Goyal (@deepigoyal) July 31, 2019
இதையடுத்து பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் உணவுக்கு ஏதேனும் மதம் இருக்கிறதா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்களால் உணவு டெலிவரி பாதிக்கப்படுகிறது என்றாலும், அனைத்து மதத்தினரும் சகோதரராக பழகிக் கொண்டிருக்கும் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் சர்ச்சையையும் ஏற்படுத்துகிறது. இது போன்ற சர்ச்சைகள் இனிமேலும் நிகழாதவாறு, டெலிவரி நிறுவனங்களும் அரசுகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சோஷியல் மீடியாவில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.