Tata Curvv: என்னடா பொசுக்குன்னு ஏத்திட்டீங்க.. ரெண்டு மாசம் டல்லடிச்சுமா? கூபே காரின் விலையை ஏற்றிய டாடா
Tata Curvv Price Hike: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டாடா நிறுவனம் தனது கர்வ் கார் மாடலின் விலையை திடீரென உயர்த்தி அறிவித்துள்ளது.

Tata Curvv Price Hike: இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்ட முதல் எஸ்யுவி கூபே கார் மாடலாக, கடந்த செப்டம்பர் மாதத்தில் கர்வ் கார் மாடல் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.
கர்வ் கார் விலையை உயர்த்திய டாடா:
இந்திய ஆட்டமொபைல் சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கர்வ் கார் மாடலின் விலையை உயர்த்துவதாகவும், புதிய விலை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் டாடா நிறுவனம் அறிவித்துள்ளது. குறிப்பிட்ட கார் வேரியண்ட்களுக்கு மட்டுமே இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கர்வ் கார் மாடலின் தொடக்க விலை தற்போதும் 9 லட்சத்து 99 ஆயிரத்து 990 ரூபாயாக உள்ளது. அதாவது இந்த கார் 10 லட்சத்திற்கும் குறைந்த விலையிலேயே கிடைக்கிறது என்ற தாக்கத்தை ஏற்படுத்துவதில் டாடா தீர்மானமாக உள்ளது. அதேநேரம், விலை உயர்வுக்கான காரணம் எதையும் டாடா நிறுவனம் விளக்கவில்லை.
டாடா கர்வ் - எந்த வேரியண்டிற்கு எவ்வளவு விலை உயர்வு?
டாடா கர்வ் வேரியண்ட்கள் பட்டியலில் உள்ள Creative S GDI டர்போ-பெட்ரோல் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன், Accomplished+ A GDI டர்போ பெட்ரோல்-DCA, Creative+ S GDI டர்போ பெட்ரோல்-மேனுவல் ட்ரான்ஸ்மிஷன், Creative+ S GDI டர்போ-பெட்ரோல் DCA, Accomplished S GDI டர்போ-பெட்ரோல் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன், Accomplished+ A GDI டர்போ பெட்ரோல்-மேனுவல் ட்ரான்ஸ்மிஷன், மற்றும் Accomplished+ A GDI டர்போ பெட்ரோல்-DCA வேரியண்ட்களின் விலை ரூ.3000 உயர்ந்துள்ளது.
ஸ்டேண்டர்ட் எடிஷன் மற்றும் மேற்குறிப்பிடப்பட்ட வேரியண்ட்களை தவிர, கர்வின் மற்ற அனைத்து வேரியண்ட்களுக்கும் 13 ஆயிரம் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தற்போதும் தொடக்க விலை ரூ.9,90,900 ஆக இருந்தாலும் அதிகபட்ச விலை ரூ.19,51,990 ஆக உயர்ந்துள்ளது.
டாடா கர்வ் - 3 இன்ஜின் ஆப்ஷன்கள்
கர்வ் கார் மாடலுக்கு டாடா நிறுவனம் 3 இன்ஜின் ஆப்ஷன்களை வழங்கியுள்ளது. அதன்படி, 118hp மற்றும் 170Nm ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.2 லிட்டர் ரெவொட்ரான் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக 123hp மற்றும் 225Nm ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.2 லிட்டர் ஹைபீரியன் டர்போசார்ஜ்ட் டைரக்ட் இன்ஜெக்ஷன் பெட்ரோல் இன்ஜினும் வழங்கப்பட்டுள்ளது.
அடிக்கடி நீண்ட தூர பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு எரிபொருள் செலவை குறைக்கும் நோக்கில், 116hp மற்றும் 260Nm ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.5 லிட்டர் க்ரையோஜெட் டர்போசார்ஜ்ட் டீசல் இன்ஜினும் வழங்கப்பட்டுள்ளது. இந்த மூன்று இன்ஜின்களும் 6 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் அல்லது 7 ஸ்பீட் டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டுள்ளன. இரண்டாவது ட்ரான்ஸ்மிஷன் ஆனது அதிகப்படியான வேரியண்ட்களில் கிடைக்கப்பெறுகிறது. பெட்ரோல் இன்ஜின் லிட்டருக்கு 11 முதல் 15 கிலோ மீட்டரும், டீசல் இன்ஜின் 13 முதல் 22.40 கிலோ மீட்டரும் மைலேஜ் அளிப்பதாக கர்வ் பயனாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டாடா கர்வ் - தொழில்நுட்ப அம்சங்கள்:
கர்வ் காரில் ஏராளமான பிரீமியம் அம்சங்களை டாடா நிறுவனம் இணைத்துள்ளது. அதன்படி, வரவேற்பு லைட்டுடன் கூடிய ஃப்ளஷ் - ஃபிட்டட் டோர் ஹேண்டில்ஸ், 18 இன்ச் அலாய் வீல்கள், கெஸ்டர் ஆக்டிவேஷன் உடன் கூடிய பவர்ட் டெயில்கேட், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், மூட் லைட்டிங் உடன் கூடிய பனோரமிக் சன்ரூஃப், 6 கோணங்களில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கையுடன் கூடிய வெண்டிலேடட் ஃப்ரண்ட் சீட்ஸ், ரிக்ளைனிங் புன்புற இருக்கைகள் ஆகிய அம்சங்கள் நிரம்பி வழிகின்றன.
டாடா கர்வ் - பாதுகாப்பு அம்சங்கள்:
பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டால் பல்வேறு விதமான லெவல் 2 ADAS பாதுகாப்பு வசதிகளை கர்வ் பெற்றுள்ளது. உதாரணமாக ட்ரைவருக்கு உதவிகரமாக இருக்க 360 டிகிரி கேமரா சிஸ்டம், 6 ஏர் பேக்குகள், எலெக்ட்ரோமேடிக் ஐஆர்விஎம், ஹில் டிஸ்செண்ட் கண்ட்ரோல், ஆட்டோமேடிக் ஹெட்லேம்ப்ஸ் உள்ளிட்ட பல அம்சங்களை பெற்றுள்ளன. தேசிய பாதுகாப்பு தர பரிசோதனையில் 5 ஸ்டார்களை பெற்றுள்ளது.
காற்று வாங்கும் டாடா:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மாருதி சுசூகிக்கு அடுத்தபடியாக சிறந்த விற்பனையை பதிவு செய்து வந்த டாடா நிறுவனம், கடந்த இரண்டு மாதங்களாக சரிவை சந்தித்து வருகிறது. டாடா மோட்டார்ஸின் மொத்த விற்பனை மே மாதத்தில் 9 சதவிகிதமும், ஜுன் மாதத்தில் 2024ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14.8 சதவிகிதம் சரிவை சந்தித்துள்ளது. கடந்த 42 மாதங்களில் இல்லாத சரிவு இது என கூறப்படுகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட கர்வ் கார் மாடலில், கடந்த ஏப்ரலில் சுமார் 4,300 யூனிட்கள் (இன்ஜின் + EV) விற்பனையாகின. ஆனால், மே மாதத்தில் இந்த விற்பனை 3 ஆயிரத்து 60 ஆக குறைந்தது. சந்தைக்கு வந்த 10 மாதங்களிலேயே சரிவை சந்தித்த சூழலில் தான், கர்வ் கார் மாடலின் விலையை டாடா நிறுவனம் உயர்த்தியுள்ளது.





















