Gyanvapi Mosque : கியான்வாபி மசூதி வழக்கு: வீடியோ ஆய்வுக்கு உத்தரவிட்ட நீதிபதிக்கு மிரட்டல்
கியான்வாபி மசூதி வழக்கில் வீடியோ ஆய்வுக்கு உத்தரவிட்ட நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கியான்வாபி மசூதி வழக்கில் வீடியோ ஆய்வுக்கு உத்தரவிட்ட நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை பிறப்பித்த நீதிபதியின் பெயர் ரவி குமார் திவாகர். இவருக்கு நேற்று ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அந்தக் கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ஒரு இந்து நீதிபதியிடமிருந்து முஸ்லிமுக்கு எப்படி நீதி கிடைக்கும். அதனால் தான் அந்த நீதிபதி மசூதியை கோயில் எனக் கூறியுள்ளார். அவர் ஒரு காஃபிர். இன்றைய இந்தியாவில் சமூகம், அரசியல், கலாச்சாரம் வெறுப்பு நிறைந்ததாக உள்ளது. நீதிபதிகளுக்கும் காவி சாயம் வந்துவிட்டது. நீதிபதிகள் இந்து தீவிரவாதிகள், அரசியல் தலைவர்களுக்கு அஞ்சி தீர்ப்பு எழுதுகின்றனர். அவர்கள் நீதியை மதித்தால் குடும்பத்தின் பாதுகாப்புக்கு அஞ்சாமல் தீர்ப்பளித்திருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கு பின்னணி:
உத்தரப் பிரதேசம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் கியான்வாபி மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதி, கோயிலை இடித்து முகலாய பேரரசர் அவுரங்கசீப்பால் கட்டப்பட்டதாக புகார் கூறப்படுகிறது. மேலும், மசூதி சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை தினசரி தரிசிக்க உத்தரவிடக் கோரிய வழக்கும் உள்ளது. வாரணாசியை சேர்ந்த இந்துப் பெண்கள் 5 பேர் சேர்ந்து இந்த வழக்கைத் தொடர்ந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில், வாரணாசி சிவில் நீதிமன்ற நீதிபதி ரவி குமார் திவாகர் 3 நாட்கள் கள ஆய்வு மற்றும் ஆய்வு முழுமையாக வீடியோ பதிவும் செய்யப்பட வேண்டும் என்று உத்திரவிட்டார்,. அதன்படி, கியான்வாபி மசூதிக்குள் கள ஆய்வு நடைபெற்றது.
கள ஆய்வில், தொழுகைக்கு முன்பாக கை, கால்களை சுத்தப்படுத்தும் ஒசுகானாவின் நடுவே சிவலிங்கம் இருப்பதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. இதையடுத்து, சிவலிங்கம் இருப்பதாகக் கூறப்படும் மசூதியின் ஒரு பகுதி நீதிமன்ற உத்தரவின்படி கையகப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இந்த உத்தரவை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டுள்ளது. ஒசுகானாவில் உள்ள சிவலிங்கத்தை அளக்கவும், அதை சுற்றியுள்ள சுவரை உடைக்கவும் இந்துக்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கியான்வாபி மசூதி வழக்கில் வீடியோ ஆய்வுக்கு உத்தரவிட்ட நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கியான்வாபி மசூதி வழக்கில் கருத்து தெரிவித்த பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபூர் சர்மா தெரிவித்த கருத்து உலகளவில் கண்டனங்களைப் பெற்றுள்ளது. இதனால், அல்குவைதா தீவிரவாத அமைப்பு இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் என்று மிரட்டல் விடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. டெல்லி, மும்பை, குஜராத், உத்தரப் பிரதேச நகரங்களில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்படும் என்று அல்குவைதா எச்சரித்துள்ளது. இந்தியாவுக்கு இஸ்லாமிய நாடுகள் பல தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன.