ஜனவரி 1 முதல் எதுவெல்லாம் ஜி.எஸ்.டியால் விலை உயர்கிறது தெரியுமா?
வரும் 2022ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் ஜி.எஸ்.டி வரி விதிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு பொருள்களின் விலை உயர்வதற்கான சாத்தியங்கள் ஏற்பட்டுள்ளன.
வரும் 2022ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் ஜி.எஸ்.டி வரி விதிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு பொருள்களின் விலை உயர்வதற்கான சாத்தியங்கள் ஏற்பட்டுள்ளன.
நேரடி வரிகளுக்கான மத்திய வாரியம் சமீபத்தில் ஆடைகள், உடைகள், காலணிகள் ஆகியவற்றின் மீதான ஜி.எஸ்.டி வரிகளை அதிகரித்தது. ஜி.எஸ்.டி கவுன்சிலின் அறிவுரைக்கேற்ப இந்தப் புதிய வரி விதிப்பு அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, வரும் ஜனவரி 1 முதல், இந்தப் பொருள்களின் மீதான வரி சுமார் 5 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக உயர்த்தப்படவுள்ளது,
ஜி.எஸ்.டி வரி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், இந்தப் பொருள்களின் விலையும் அதிகரித்து, சில்லறை விலையில் மக்கள் அதனைப் பயன்பாட்டுக்காக வாங்கும் போது அதிக விலை கொடுக்கும் சூழல் உருவாகிறது.
1000 ரூபாய்க்கு மேல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆடைகளின் மீதான ஜி.எஸ்.டி வரி, 5 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ஃபேப்ரிக் துணி, செயற்கை நூலால் செய்யப்படும் சிந்தெடிக் துணி, கம்பளிகள், டெண்ட்கள் முதலானவை ஜி.எஸ்.டி அதிகரிக்கப்பட்டிருப்பதால் கூடுதல் விலைக்கு விற்கப்படவுள்ளன.
1000 ரூபாய்க்கு மேல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள காலணிகளின் மீதான ஜி.எஸ்.டி வரியும் 5 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
வரும் 2022-ஆம் ஆண்டு, ஜனவரி 1 முதல் ஆன்லைனில் பதிவு செய்யப்படும் ஆட்டோ பயணக் கட்டணங்களின் மீது 5 சதவிகித ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படவுள்ளதால், ஓலா, ஊபர் முதலான செயலிகளின் மூலமாக பதிவு செய்யப்படும் ஆட்டோ கட்டணங்களும் உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. எனினும், தெருக்களில் நேரடியாக நாம் அழைத்துப் பயன்படுத்தும் ஆட்டோவின் மீது ஜி.எஸ்.டி வரி விதிப்பு பொருந்தாது.
அடுத்ததாக ஸ்விக்கி, ஜொமாட்டோ முதலான உணவு டெலிவரி ஆப்களின் மீதும் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்த செயலிகள் வாடிக்கையாளர்களிடம் 5 சதவிகித ஜி.எஸ்.டியை வசூல் செய்து ஆண்டுதோறும் ஒன்றிய அரசுக்கு செலுத்தும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டெலிவரி மேற்கொள்ளப்பட்டு வந்த உணவகங்கள் அரசுக்கு ஜி.எஸ்.டி செலுத்தி வந்த நிலையில், இந்தப் பொறுப்பு தற்போது செயலிகளின் நிறுவனங்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாது என்று கூறப்பட்டுள்ளது.