Google Map Update: ஃபைனலி..! இனி கூகுள் மேப்பில் மேம்பால வளைவுகள், ஈவி சார்ஜர் மையங்களை அறியலாம் - அப்டேட்கள் என்னென்ன?
Google Map Update: கூகுள் மேப் இந்திய பயனாளர்களுக்கு என பிரத்யேகமான சில அப்டேட்களை, பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளது.
Google Map Update: இந்தியாவில் கூகுள் மேப் மூலம் இனி மேம்பால வளைவுகளையும் அறியும் வகையில் அப்டேட் வழங்கப்பட உள்ளது.
கூகுள் மேப்ஸ் அப்டேட்கள்:
இந்தியாவில் பயணம் மேற்கொள்பவர்கள் மிகவும் சார்ந்துள்ள செயலிகளில் ஒன்று கூகுள் மேப்ஸ். இதுவரை சென்றிடாத பகுதிகளில் கூட பயணம் மேற்கொள்ள, ஒரு சிறந்த வழிகாட்டியாக உள்ளது. இந்நிலையில், கூகுள் மேப்ஸ் செயலியில் இந்திய பயனாளர்களுக்காக புதிய அப்டேட்களை வழங்கி உள்ளது. பயனர்கள் எதிர்கொள்ளும் பல தனித்துவமான சவால்களை எதிர்கொள்வதையும், பயன்பாட்டை எளிதாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறுகிய சாலைகள், மேம்பாலங்களில் செல்லுதல், EV சார்ஜிங் நிலையங்களைக் கண்டறிதல் போன்றவை புதிய அப்டேட்டில் அடங்கும். இவை வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறுகலான சாலைகளை கண்டறிதல்:
இந்த அப்டேட், பயனர்கள் பயணிக்கும் பாதையில் உள்ள சாலைகளின் குறுகலான பகுதிகளைப் பற்றிய தகவல்களை வழங்குகிறது. இந்த புதிய அம்சம் இந்தியா போன்ற குறுகலான பாதைகளைக் கொண்ட ஒரு நாட்டிற்கு மிகவும் அவசியமானதாக இருக்கும். மொத்த பயண நேரத்திலிருந்து சில நிமிடங்களைச் சேமிக்கும் நோக்கில், கூகுள் மேப்ஸ் குறுகலான பாதைகளை பரிந்துரைப்பதாக பயனர்கள் குற்றம்சாட்டி இருந்தனர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இந்த அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஐதராபாத், பெங்களூரு, சென்னை, கோயம்புத்தூர், இந்தூர், போபால், புவனேஸ்வர் மற்றும் கவுகாத்தி ஆகிய எட்டு நகரங்களில் இந்த வாரம் ஆண்ட்ராய்டு சாதனங்களில் இந்த அம்சத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வருகிறது. செயற்கைக்கோள் படங்கள், வீதிக் காட்சி மற்றும் சாலை வகைகள், கட்டிடங்களுக்கு இடையிலான தூரம், நடைபாதை பகுதிகள் போன்ற பிற தகவல்களிலிருந்து தரவை சேகரிக்க AI ஐப் பயன்படுத்த உள்ளது.
மேம்பால வளைவுகள்:
கூகுள் மேப்ஸில் பன்நெடுங்காலமாக இருந்த ஒரு பிரச்னைக்கு தற்போது முடிவு எட்டப்பட்டுள்ளது. அதன்படி, பயணிக்கும் வழியில் உள்ள மேம்பாலத்தை அணுகும் போது, அதை எடுத்துச் செல்வதா அல்லது சர்வீஸ் சாலையில் தொடர்வதா என்பது தெரியாமல் கூகுள் மேப் பயனாளர்கள் தவிப்பது தொடர்கதையாக இருந்தது. அதற்கான தீர்வாக தான் புதிய அம்சமாக காட்சி விழிப்பூட்டல் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வாரம் முதல் 40 இந்திய நகரங்களில் செயலியைப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த அம்சம் கிடைக்கும். இருப்பினும், இது ஆரம்பத்தில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்றும், iOS பயனர்கள் பின்னர் அதே அம்சத்தைப் பெறுவார்கள் என்றும் கூகுள் கூறியது. அதாவது, பயனர்கள் மேம்பாலத்தை நெருங்கும்போது அதில் தொடரலாமா அல்லது சர்வீஸ் சாலைகளை பயன்படுத்தலாமா என்ற பரிந்துரைகளும் இனி கூகுள் மேப்ஸ் வழங்கும்.
EV சார்ஜிங் நிலையங்கள் பற்றிய தகவல்
கூகுள் மேப்ஸ் இனி சார்ஜிங் நிலையங்கள் பற்றிய கூடுதல் தகவல்களை வழங்கும். EV பயனர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் வகையில், ElectricPe, Ather, Kazam மற்றும் Statiq உள்ளிட்ட பல EV சார்ஜிங் வழங்குநர்களுடன் Google இப்போது கூட்டு சேர்ந்துள்ளது. பயன்பாட்டில் உள்ள 8,000 க்கும் மேற்பட்ட சார்ஜிங் நிலையங்களைப் பற்றிய தகவல்களை வழங்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது இந்தியாவில் உள்ள மொத்த நிலையங்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க பகுதியைக் கொண்டுள்ளது என்று கூகுள் கூறுகிறது. பிளக் வகைகள் (இரு சக்கர வாகனங்கள் உட்பட) மற்றும் நிகழ்நேர கிடைக்கும் தன்மை உள்ளிட்ட விரிவான தகவல்களை பயனர்கள் விரைவில் எளிதாகக் கண்டறிய முடியும். பயனர்கள் ஒரு குறிப்பிட்ட சார்ஜர் வகை மூலம் நிலையங்களை வடிகட்டலாம் மற்றும் அவர்கள் செல்வதற்கு முன் நிலையம் திறந்திருக்கிறதா என்று சரிபார்க்கலாம்.
மெட்ரோ டிக்கெட் முன்பதிவுகள்:
பயனர்கள் இப்போது கூகுள் மேப்ஸில் மெட்ரோ டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். இதற்காக, டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த நெட்வொர்க் (ONDC) மற்றும் நம்ம யாத்ரி ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக, கூகுள் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த அம்சம் அடுத்த வாரம் முதல் சென்னை மற்றும் கொச்சியில் தொடங்கி படிப்படியாக இந்தியா முழுவதும் கிடைக்கும். பயனர்கள் மெட்ரோ நிலையங்களைப் பற்றிய தகவல்களைத் தேடும்போது, அவர்கள் இப்போது புதிய முன்பதிவு விருப்பத்தை காணலாம்.
புகாரளிக்க எளிதான வழி
கூகுள் மேப்ஸில் விபத்துகளை பற்றி புகாரளிக்கும் செயல்முறையும் எளிமையான செயலாக மாற உள்ளது. பயனர்கள் பிறரின் அறிக்கைகளை ஒரே தட்டினால் உறுதிப்படுத்த முடியும், இது புகார்கள் தொடர்பான நம்பிக்கையை அதிகரிக்க உதவும். இந்த அப்டேட் இந்தியாவில் Google மேப்ஸில் Android, iOS, Android Auto மற்றும் Apple CarPlay ஆகிய அனைத்து தளங்களிலும் கிடைக்கிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல்:
சாப்பிடுவதற்கும், அருந்துவதற்கும், பயணிப்பதற்குமான சிறந்த இடங்களை பற்றி அறிய, கூகுள் மேப்ஸ் இப்போது க்யூரேட்டட் பட்டியலை காண்பிக்கும். இதற்கான சில தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து பயணிக்கிறது. முதற்கட்டமாக பெங்களூரு, டெல்லி, மும்பை, கோவா, ஐதராபாத், புனே, அகமதாபாத், சென்னை, கொல்கத்தா மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய பத்து முக்கிய நகரங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கான பட்டியல்களை அவர்கள் தொகுத்துள்ளனர்.