Odisha Train Derailed: ஒடிஷாவில் மீண்டும் ரயில் விபத்து.. தடம்புரண்ட சரக்கு ரயில்.. 5 பெட்டிகள் சேதம்..
Odisha Train Derailed: ஒடிஷாவில் மீண்டும் ரயில் விபத்து.. தடம்புரண்ட சரக்கு ரயில்.. 5 பெட்டிகள் சேதம்..
ஒடிஷாவில் சுண்ணாம்புக்கல் ஏற்றிச்சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டது. பார்கார் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது. சரக்கு ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டது. யாருக்கும் காயம் இல்லை எனவும் முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிஷா மாநிலத்தின் பாலசோர் பகுதியில் கடந்த 2ம் தேதி மாலையில், 3 ரயில்கள் மோதி நிகழ்ந்த கோர விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் உடல் நசுங்கி பலியான பலரது உடல்கள் இதுவரை அடையாளம் காணமுடியாத சூழலில் தான் உள்ளன. இதனிடையே, நூற்றுக்கணக்கானோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரம், விபத்து நிகழ்ந்த இடத்தில் துரித கதியில் மறுசீரமைப்பு பணிகள் இரவு பகலாக நடைபெற்று வந்தது. தண்டவாளங்களை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டன. விபத்து நிகழ்ந்த இடத்தை பிரதமர் மோடி நேரில் பார்வையிட்ட நிலையில், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் சம்பவ இடத்திலேயே கடந்த 3 தினங்களாக இருந்து மறுசீரமைப்பு பணிகளை மேற்பார்வையிட்டார். அதோடு, புதன்கிழமைக்குள் அந்த வழித்தடத்தில் மீண்டும் ரயில் சேவை தொடங்க இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் கூறியிருந்தார்.
தண்டவாளங்களில் சேதமடைந்த பெட்டிகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. அதேபோல் மின் இணைப்புகள் மற்றும் தண்டவாளங்கள் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில் சுமார் 51 மணி நேரத்தில் முழுமையாக சீரமைக்கப்பட்டு மீண்டும் ரயில்கள் இயக்கப்பட்டது. சீரமைக்கப்பட்ட பகுதியில் முதலில் சரக்கு ரயில் பயணம் மேற்கொண்டது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், “இங்கு நேர்ந்த கோர விபத்தால், ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், புதன்கிழமைக்குள் சீரமைக்க திட்டமிடப்பட்டு இருந்த ரயில் போக்குவரத்து, நேற்று இரவே சீரமைக்கப்பட்டு சேவையும் தொடங்கியுள்ளது” என கூறினார்.
இந்த சம்பவம் நடைபெற்று அதிலிருந்து மீண்டு வருவதற்குள் மீண்டும் ஒரு ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது. பார்கார் என்ற பகுதியில் சரக்கு ரயில் தடம் புரண்டது. இதில் 5 பெட்டிகள் சேதமடைந்துள்ளது. பால்சோர் பகுதியிலிருந்து 400 கிமீ தொலைவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் காயமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் தடம் புரண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து அதிகார்ப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.