Moon Temperature: நிலவின் வெப்ப நிலை என்ன? விஞ்ஞான உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்திய இஸ்ரோவின் புது அப்டேட்
நிலவின் தென்துருவத்தின் வெப்பநிலை ஆராயப்படுவது இதுவே முதல்முறை என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
விண்வெளி ஆராய்ச்சியை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்ற இந்தியா:
நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், கடந்த மாதம் 14ம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்தியுள்ளது. 40 நாட்கள் பயணத்திற்கு பிறகு கடந்த 23ம் தேதி மாலை சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
இதன் மூலம் நிலவின் மேற்பரப்பில் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்கிய நான்காவது நாடு மற்றும் நிலவின் தென் துருவத்தில் லேண்டரை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
விஞ்ஞான உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்திய இஸ்ரோவின் ஆய்வு தகவல்:
நிலவை ஆராய்வதற்காக சந்திரயான் - 3 விண்கலத்தில் பல கருவிகள் அனுப்பப்பட்டுள்ளன. வெப்ப கடத்துத்திறன் மற்றும் வெப்பநிலையை தெரிந்து கொள்வதற்காக ChaSTE கருவியும் தரையிறங்கும் இடத்தை சுற்றி நில அதிர்வு தொடர்பாக ஆராய்வதற்காக ILSA கருவியும் மின் திறன் கொண்ட துகள்களை பற்றி ஆராய LP கருவியும் விக்ரம் லேண்டரில் அனுப்பப்பட்டுள்ளன.
அனுப்பப்பட்ட கருவிகளின் மூலம் நிலவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டு வரும் நிலையில், இன்று முக்கிய தகவல் ஒன்றை இஸ்ரோ பகிர்ந்துள்ளது. அதன்படி, பல்வேறு பள்ளங்களில் பதிவான வெப்பநிலை மாறுபாடுகளை ChaSTE கருவி பதிவு செய்து வெளியிட்டுள்ளது. அதை, எக்ஸ் (முன்னதாக ட்விட்டர் என அழைக்கப்பட்டது) சமூக வலைதளத்தில் இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவின் தென்துருவத்தின் வெப்பநிலை ஆராயப்படுவது இதுவே முதல்முறை என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவின் வெப்பநிலை என்ன?
மேற்பரப்புக்கு கீழே 10 செ.மீ ஆழம் வரை வெப்பநிலையை ஆராய்வதற்காக ChaSTE கருவியில் 10 தனித்தனி சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ChaSTE கருவியை விண்வெளி இயற்பியல் ஆய்வகத்தின் தலைமையிலான குழு, அகமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்துடன் இணைந்து மேம்படுத்தியுள்ளது.
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) August 27, 2023
Here are the first observations from the ChaSTE payload onboard Vikram Lander.
ChaSTE (Chandra's Surface Thermophysical Experiment) measures the temperature profile of the lunar topsoil around the pole, to understand the thermal behaviour of the moon's… pic.twitter.com/VZ1cjWHTnd
அதேபோல, 6 சக்கரம் கொண்ட 26 கிலோ எடையிலான பிரக்யான் ரோவரில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக பல்வேறு ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த ரோவரின் ஆய்வு நாட்கள் 14 நாட்கள் ஆகும். இந்த ரோவர் நிலவில் சுமார் 100 மீட்டர் முதல் 500 மீட்டர் வரை செல்லும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
நொடிக்கு ஒரு சென்டி மீட்டர் தூரம் அளவிற்கு மட்டுமே இந்த ரோவர் பயணிக்கும். அப்போது நிலவில் உள்ள நீராதாரம், கனிம வளங்கள், நிலவின் அமைப்பு, தோற்றம் மற்றும் நிலவின் வளிமண்டலம் என பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆராயப்பட உள்ளன.