கொரோனா பாதிக்கப்பட்ட பரூக் அப்துல்லா மருத்துவமனையில் அனுமதி
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா கொரோனா நோய்த் தொற்று சிகிச்சை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து உமர் அப்துல்லா தனது சுட்டுரையில், " மருத்துவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் எனது தந்தை ஸ்ரீநகரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் நிபுணர்களின் கண்காணிப்பில் இருப்பார். ஆதரவு தெரிவித்த அனைவருக்கு எங்கள் குடும்பம் நன்றியுடன் இருக்கிறது" என்று பதிவிட்டார்.
83 வயதான அப்துல்லா கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் கோவிட் -19 தடுப்பு மருந்தின் முதல் டோசை எடுத்துக் கொண்டார். ஆனால் இதுவரை இரண்டாவது டோசை பெறவில்லை. கோவிட்-19 தொற்றிலிருந்து டாக்டர் பரூக் அப்துல்லா விரைவில் குணமடைய பிரதமர் நரேந்திர மோடி தனது பிரார்த்திப்பதாக தெரிவித்தார்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள செய்தி குறிப்பில்,‘‘டாக்டர் பரூக் அப்துல்லா அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் எனவும், விரைவில் குணமடைய வேண்டும் எனவும் பிரார்த்திக்கிறேன். உமர் அப்துல்லா மற்றும் அவரது குடும்பத்தினர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கவும் வேண்டுகிறேன்’ எனக் குறிப்பிட்டார்.