One Nation One Election Explainer: ஒரே நாடு ஒரே தேர்தல்.. கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதா?
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதில் உள்ள சிக்கல்கள் என்ன? பலன்கள் என்ன? என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.
![One Nation One Election Explainer: ஒரே நாடு ஒரே தேர்தல்.. கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதா? Explained What is the one nation one election how can it came into effect know more details here One Nation One Election Explainer: ஒரே நாடு ஒரே தேர்தல்.. கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/05/e2b50d7e1d17d6899908df1e56a7da771693909721508729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில், மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பாஜக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியிருப்பது ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தான். வரும் 18ஆம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றம் மற்றும் நாடு முழுவதும் உள்ள சட்டப்பேரவைகளுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது தொடர்பான, இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய, கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு, உயர் மட்டக் குழு ஒன்றை அமைத்தது.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால் என்ன?
நாட்டில் அடிக்கடி தேர்தல் நடைபெறுவதை குறைக்கும் நோக்கில் மக்களவைக்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முன்மொழியப்பட்ட திட்டம்தான் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்.
கடந்த 1950ஆம் ஆண்டு, ஜனவரி 26ஆம் தேதி, அரசியலமைப்பு அமலுக்கு வந்த பிறகு, 1951-52 காலக்கட்டத்தில் மக்களவைக்கும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் பொதுத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. இந்த நடைமுறை, மூன்று மக்களவை தேர்தலுக்கு தொடர்ந்த நிலையில், கடந்த 1967ஆம் ஆண்டு, தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தும் நடைமுறை தடைப்பட்டது. அரசியலமைப்பு தோல்வி அடைந்ததாகக் கூறி, கடந்த 1959ஆம் ஆண்டு, அப்போதைய கேரள அரசு கலைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற கட்சி தாவல்கள் காரணமாகவும் 1960க்குப் பிறகு பல சட்டப்பேரவைகள் கலைக்கப்பட்டதன் விளைவாகவும் மக்களவைக்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. தற்போதைக்கு, மக்களவை தேர்தலுடன், அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஆந்திர பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்கள் ஒன்றாக நடத்தப்பட்டு வருகிறது.
மத்திய அரசு அமைத்த கமிட்டிக்கள் சொன்னது என்ன?
கடந்த 2018ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், நீதிபதி பி.எஸ். சௌஹான் தலைமையிலான இந்திய சட்ட ஆணையம் (எல்சிஐ) ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவது குறித்த வரைவு அறிக்கையை வெளியிட்டது. இதில் அடங்கியுள்ள அரசியலமைப்பு மற்றும் சட்ட சிக்கல்கள் குறித்து ஆராயப்பட்டன. தற்போதுள்ள அரசியலமைப்பின்படி, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை என்று ஆணையம் அறிக்கை சமர்பித்தது. மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் நடத்த அரசியலமைப்பு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளின் நடைமுறை விதிகளில் தகுந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆணையம் தெரிவித்தது. அதே சமயத்தில், அதற்கு, 50 சதவிகித மாநில சட்டப்பேரவைகள் ஒப்புதல் தர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதில் பல நன்மைகள் இருப்பதாக கூறிய ஆணையம், "பொது மக்களின் பணத்தைச் சேமிப்பதற்கும், நிர்வாக அமைப்பு மற்றும் பாதுகாப்புப் படைகள் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்கும், அரசாங்கக் கொள்கைகளை சரியான நேரத்தில் அமல்படுத்துவதற்கும், தேர்தல் பிரசாரத்தை விட வளர்ச்சி நடவடிக்கைகளில் நிர்வாக கவனம் செலுத்துவதற்கும் இது வழிவகுக்கும்" என தெரிவித்தது.
கடந்த 1999 ஆம் ஆண்டு, நீதிபதி பி.பி. ஜீவன் ரெட்டி தலைமையிலான இந்திய சட்ட ஆணையமும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பதற்கு ஆதரவு தெரிவித்தது.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதில் உள்ள சிக்கல்கள் என்ன?
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று அரசியலமைப்பின் 83(2) மற்றும் 172 விதிகள் கூறுகிறது. ஆனால், இதற்கு விதிவிலக்கு உண்டு. சட்டப்பிரிவு 356ஐ பயன்படுத்தி ஐந்தாண்டு பதவி காலத்திற்கு முன்பே மாநில அரசுகளை மத்திய அரசு கலைக்கலாம்.
எனவே, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்துவதில் பெரிய சிக்கல் இருக்கிறது. அது என்னவென்றால், பதவிக்காலத்திற்கு முன்பே மத்தியில் ஆட்சி நடத்தும் அரசோ அல்லது மாநிலத்தில் ஆட்சி நடத்தும் அரசோ கவிழ்ந்தால் என்ன நடக்கும்? ஒவ்வொரு மாநிலத்திலும் மீண்டும் தேர்தல் நடத்தப்படுமா அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுமா? என்ற கேள்வி எழுகிறது. இந்திய அரசியலமைப்பு வரலாற்றில் இதுவரை நடந்திராத அளவுக்கு அரசியலமைப்பை பெரிய அளவில் திருத்த வேண்டும். பல்வேறு சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, விதிகளை கருத்தில் கொண்டு, விரிவாக பரிசீலினை செய்ய வேண்டும். அதன்பிறகுதான், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த முடியும்.
இரண்டாவதாக, கூட்டாட்சி என்ற தத்துவத்திற்கு எதிராக ஒரே நாடு ஒரே தேர்தல் முறை இருப்பதாக சட்ட வல்லுநர்கள் கருதுகின்றனர். அரசியலமைப்பு சட்டப்பிரிவு 1, இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என்றே குறிப்பிடுகிறது. ஆனால், இதற்கு நேர் மாறாக, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ஒட்டுமொத்த தேசத்தையும் ஒன்றாக கருதுகிறது.
மூன்றாவதாக, தற்போதைய தேர்தல் முறையில் வாக்காளர்கள் தங்களின் பிரச்னைகளை அடிக்கடி எழுப்பி, அதற்கு தீர்வு காணும் வகையில் அமைந்துள்ளது. மக்களவை, சட்டப்பேரவை, உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனித்தனியே தேர்தல் நடத்தப்படும் போது, மக்கள் பிரதிநிதிகள் மக்களை அடிக்கடி சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இது, ஜனநாயகத்தை மேலும் வலுவூட்டும். அதேபோல, தேசிய அளவிலான பிரச்னைகளுக்கும் மாநில அளவிலான பிரச்னைகளுக்கும் அடிப்படை வேறுபாடு இருப்பதால் தற்போதைய கட்டமைப்பு, அதற்கு ஏற்றவாறு வாக்களிக்க வாய்ப்பளிக்கிறது. ஆனால், தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தும்போது அது தடைபட வாய்ப்புள்ளது.
அடிக்கடி தேர்தல் நடத்துவதால் கணிசமான செலவு ஏற்படுவதாக மத்திய அரசு வாதிடுகிறது. ஐந்தாண்டு காலக்கட்டத்தில் நாடு முழுவதும் பல்வேறு விதமான தேர்தல்களை நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு 8,000 கோடி ரூபாய் செலவாகிறதாக தரவுகள் கூறுகின்றன. அதாவது, ஆண்டுக்கு ஒரு முறை 1,500 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகிறது. இதை இன்னும் விளக்க வேண்டுமானால், ஓராண்டுக்கு ஒரு வாக்களருக்கு 27 ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. உலகின் பெரிய ஜனநாயகம் என்ற பெருமையை ஏந்தும் நாடால் ஆண்டுக்கு ஒரு வாக்களுருக்கு 27 ரூபாய் செலவு செய்ய முடியாதா என்ற கேள்வி எழாமல் இல்லை.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)