Vice President Election: செப்டம்பர் 9-ம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
செப்டம்பர் 9-ம் தேதி குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெக்தீப் தன்கர் ராஜினாமா செய்ததையடுத்து, வரும் செப்டம்பர் 9-ம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 9-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்.9-ல் தேர்தல் நடத்தப்பட்டு அன்றே வாக்கு எண்ணிக்கை
நாட்டின் 14-வது குடியரசு துணைத் தலைவராக கடந்த 2022-ம் ஆண்டு முதல் ஜக்தீப் தன்கர் செயல்பட்டு வந்தார். அவரது பதவிக்காலம், 2027-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி வரை இருந்தது. இந்நிலையில், கடந்த 21-ம் தேதி குடியரசு துணைத் தலைவர் பதவியை அவர் திடீரென ராஜினாமா செய்தார்.
பதவிக்காலம் முடிவதற்கு 2 ஆண்டகளுக்கு முன்பே, உடல்நலம், மருத்துவ காரணங்களால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஜக்தீப் தன்கர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, குடியரசு துணைத் தலைவர் பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
உயிரிழப்பு, ராஜினாமா அல்லது பதவி நீக்கம் உள்ளிட்ட காரணங்களால், குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருப்பவர்கள் முழு பதவிக் காலமான 5 ஆண்டுகள் தொடர முடியாமல் அந்த இடம் காலியாக நேரிட்டால், அந்த காலி இடத்தை நிரப்புவதற்கான தேர்தல் கூடிய விரைவில் நடத்தப்பட வேண்டும் என அரசியலமைப்பு சட்டப்பிரிவு 68(2)-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனால், இந்த பதவிக்கான தேர்தல் விரைவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 9-ம் தேதி குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த தேர்தலுக்கு ஆகஸ்ட் 7-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. அடுத்த மாதம் 9-ம் தேதி தேர்தல் நடைபெறும் அன்றைய தினத்திலேயே வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
குடியரசு துணைத் தலைவரை மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்க உள்ளனர். குடியரசு துணைத் தலைவர் தேர்தலில், பாஜக, காங்கிரஸ் கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















