Reservation: "பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கட்டணமே இல்லை.." அதிரடி ஆஃபர் வழங்கிய பல்கலைக்கழகம்..! எங்கு தெரியுமா..?
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் கல்விக் கட்டணம் 100 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்று டெல்லி பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் கல்விக் கட்டணம் 100 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்று டெல்லி பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சமத்துவம், அணுகும் உரிமை, தரம் ஆகியவை அனைவருக்கும் கிடைப்பதை உறுதிசெய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்:
2019ஆம் ஆண்டில் 103ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம், அரசமைப்பு சட்டப் பிரிவு 15(6) மற்றும் 16(6) ஆகியவற்றை ஒருங்கிணைத்து, பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீட்டை (EWS reservation) பாஜக அரசு அறிமுகம் செய்தது. எனினும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் எஸ்சி / எஸ்டி வகுப்பினருக்கு பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீட்டில் இடமில்லை.
அரசியல் சாசன சட்டப் பிரிவு 15, மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையிலான பாகுபாட்டைத் தடுக்கிறது. சட்டப் பிரிவு 16 பொது வேலைவாய்ப்பில் சம வாய்ப்புகளை உறுதிசெய்ய வேண்டும் என்கிறது. இந்த நிலையில், 103ஆவது சட்டத் திருத்தம் EWS இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது. இதன்படி, பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்கி வருகிறது.
100 சதவீத தள்ளுபடி:
இந்நிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் கல்விக் கட்டணம் 100 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்று டெல்லி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து டெல்லி பல்கலைக்கழகம் சார்பில் உயர் அதிகாரிகள் கூறும்போது, "முழுமையான மற்றும் உள்ளடக்கிய கல்வியை டெல்லி பல்கலைக்கழகம் உறுதி செய்கிறது. வேற்றுமையில் ஒற்றுமையைக் கொண்டாடுகிறது. இதன் அடிப்படையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானத்தைப் பொறுத்து, அவர்களின் கல்விக் கட்டணம் 100 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட உள்ளது.
பல்கலைக்கழகத்தில் முழு நேரமாகப் படிக்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதி ஆனவர்கள் ஆவர். இந்தத் திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க டிசம்பர் 12ஆம் தேதி கடைசி ஆகும். எனினும் தேர்வு மற்றும் விடுதிக் கட்டணம் மட்டும் இந்த கட்டணத் தள்ளுபடிக்குள் வராது.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி, சமத்துவம், அணுகும் உரிமை, தரம் ஆகியவை அனைவருக்கும் கிடைப்பதை உறுதிசெய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாருக்கெல்லாம் தள்ளுபடி?
"எல்லோருக்கும் எல்லா வளர்ச்சியும்" (சப்கா சாத் சப்கா விகாஸ்) என்னும் அரசுடைய கொள்கையின்படி, இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.4 லட்சத்தை விடக் குறைவான குடும்ப வருமானத்தைக் கொண்ட மாணவர், இந்தத் திட்டத்தின்கீழ் 100 சதவீதக் கட்டணத் தள்ளுபடியைப் பெற முடியும். அதே நேரத்தில் ரூ.4 முதல் ரூ.8 லட்சம் வரையிலான குடும்ப ஆண்டு வருமானம் கொண்ட மாணவருக்கு 50 சதவீதக் கட்டணத் தள்ளுபடி கிடைக்கும்.
என்னென்ன ஆவணங்கள்?
மெரிட் அடிப்படையில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெறத் தகுதி ஆனவர்கள். அரியர் வைத்திருக்கும்/ வைத்திருந்த மாணவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கான சிறப்புத் திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாது. இந்தத் திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க தாசில்தார் அல்லது அதற்கு இணையான அதிகாரி கடந்த நிதி ஆண்டில் வழங்கிய குடும்ப ஆண்டு வருமானச் சான்றிதழ் அவசியம். கட்டணம் செலுத்திய சான்றிதழ்களும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
மாணவர் பெயரில் உள்ள வங்கிக் கணக்கு எண், பாஸ்புக், ஐஎஃப்எஸ்சி எண், புகைப்படம் ஆகியவையும் அவசியம்" என்று டெல்லி பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.