Phone Tapping: ஃபோனை ஹேக் செய்து சிக்க வைக்க திட்டம்? பிரதமர் மோடிக்கு சீதாராம் யெச்சூரி கடிதம்
Phone Tapping: எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன் ஹேக் செய்யப்படுவதாக, எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக பிரதமர் மோடிக்கு சிபிஎம் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கடிதம் எழுதியுள்ளார்.
Phone Tapping: தனிமனித உரிமைகள் மீறப்படுவதாக பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், சீதாராம் யெச்சூரி குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடிக்கு கடிதம்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாரம் யெச்சூரி எழுதியுள்ள கடிதத்தில், “நேற்றிரவு எனக்கு கிடைக்கப் பெற்ற எச்சரிக்கை குறுந்தகவல் இதில் இணைக்கப்பட்டுள்ளது, அதில் "உங்கள் ஆப்பிள் ஐடியுடன் தொடர்புடைய ஐபோனை தொலைதூரத்தில் இருந்து அணுக, அரசு ஆதரவு பெற்ற ஹேக்கர்களால் நீங்கள் குறிவைக்கப்படுகிறீர்கள் என்று ஆப்பிள் நிறுவனம் நம்புகிறது" என வெளிப்படையாகவே கூறியுள்ளது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டம் அதன் குடிமக்கள் அனைவருக்கும் உத்தரவாதம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளை முற்றிலும் மீறுவதாகும். ஒரு கண்காணிப்பு நிலை என்பது ஜனநாயகத்திற்கு எதிரானது. என் வேலை ஒரு திறந்த புத்தகம். அதில் மறைக்க எதுவும் இல்லை.
சிக்க வைக்க திட்டம்..!
எனவே, இதுபோன்ற ஹேக்கிங் என்பது நான் பயன்படுத்தும் கருவிகளை தொலைதூரத்தில் இருந்து ஹேக் செய்து தொலைநிலையில் இருந்தே சில தகவல்களை விதைத்து, பின்னர் அத்தகைய புனையப்பட்ட கதைகளின் அடிப்படையில் என்னைக் குற்றம் சாட்டுவதற்கான முயற்சிகள் தான். உங்கள் தலைமையிலான இந்த அரசாங்கம் மத்திய அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துவதைப் பார்க்கும்போது, அத்தகைய வாய்ப்பு மிகவும் உண்மையானது. பிரதமர் பதவிக்கான உங்கள் அனுமானம் இந்திய அரசியலமைப்பை நிலைநிறுத்துவதற்கான உறுதிமொழிக்கு உட்பட்டது. மாறாக, ஜனநாயகம் மற்றும் குடிமக்களின் ஜனநாயக உரிமைகள் மொத்தமாக அழிக்கப்படுகிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த விஷயத்தில் நீங்கள் உரிய பதில் அளித்தால் பாராட்டுதலுக்குரியதாக இருக்கும்” என சீதாராம் யெச்சூர் வலியுறுத்தியுள்ளார்.
ஹேக் செய்ய முயற்சி?
தங்களின் போன்களை மத்திய அரசு ஹேக் செய்ய முயற்சித்ததாக எதிர்க்கட்சிகளை சேர்ந்த 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தங்களின் போன்களுக்கு ஆப்பிள் நிறுவனம் இது தொடர்பாக எச்சரிக்கை மெயில் அனுப்பியிருப்பதாகக் கூறி, அதன் ஸ்கிரீன் ஷாட்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். உத்தவ் தாக்கரே தரப்பு சிவசேனாவை சேர்ந்த எம்பி பிரியங்கா சதுர்வேதி, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, காங்கிரஸ் கட்சியின் பவன் கேரா மற்றும் சசி தரூர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சட்டா, ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி ஆகியோர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
அரசு விசாரணைக்கு உத்தரவு:
தங்களது ஆப்பிள் ஃபோன்கள் ஹேக் செய்யப்பட்டதாக எதிர்க்கட்சி எம்.பிக்கள் மற்றும் தலைவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை மத்திய அரசு மறுத்துள்ளது. அதேநேர, இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் எனவும், மத்திய அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதனிடயே, குறிப்பிட்ட நபர்களுக்கு சென்ற எச்சரிக்கை குறுந்தகவல்கள், தவறானதாக கூட இருக்கலாம் என ஆப்பிள் நிறுவனம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.