COWIN Registration Open | ஒரு நொடிக்கு 55 ஆயிரம் பேர்.. COWIN செயலியில் குவியும் முன்பதிவுகள்..
முதல் மூன்று மணி நேரத்தில் 79,65,720 பேர் தடுப்பூசிக்காகப் பதிவு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
18-44 வயதினருக்கான கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவு நேற்று அரசின் கோவின் செயலியில் தொடங்கியது. தொடங்கிய சில மணிநேரத்துக்கு அதிகம் பேர் குவிந்ததால் ஆப் முடங்கியது. பின்னர் அது சரிசெய்யப்பட்ட நிலையில் ஒரு நொடிக்கு 55 ஆயிரம் பேர் வருகை தந்ததாக அதன் தலைவர் ஆர்.எஸ்.ஷர்மா தெரிவித்துள்ளார். மேலும் முதல் மூன்று மணிநேரத்தில் 79,65,720 பேர் தடுப்பூசிக்காகப் பதிவு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா இரண்டாம் அலை பேரிடர் காரணமாக இந்தியாவில் சராசரியாக நாளொன்றுக்கு 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பரவல் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு புதிய தடுப்பூசிக் கொள்கையை வரையறுத்தது. அதன்படி வருகின்ற 1 மே முதல் 18-44 வயதினருக்குத் தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டது. மற்றொருபக்கம் தடுப்பூசி உற்பத்தியும் முடுக்கிவிடப்பட்டது. இதற்காக தடுப்பூசி நிறுவனங்களுக்கு மத்திய அரசு கூடுதலாக 4500 கோடி ரூபாய் ஒதுக்கியிருந்தது. மேலும் வருகின்ற செப்டம்பர் மாதத்துக்குள் கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தி 10 மடங்கு அதிகரிக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அறிவித்திருந்தார். இந்நிலையில் தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவு நேற்று அரசின் கோவின் அப்ளிகேஷனில் தொடங்கியது. பல்வேறு மாநில அரசுகள் 18-44 வயதுள்ளவர்களுக்கும் இலவசமாகத் தடுப்பூசி போடப்படும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.