AP Coronavirus Strain | 10 மடங்கு அதிக தொற்றுத்தன்மையுடன் மேலும் ஒரு கொரோனா வைரஸ் வகை.. அபாயங்கள் என்ன?
புதிய வகை கொரோனா வைரஸ் ஆந்திராவில் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற வகைகளை விட 10 மடங்கு வேகமாகத் தொற்றக்கூடியது.
கொரோனா வைரஸ்களில் மிகவும் அபாயகரமானது பிரிட்டிஷ் இனவகை B1.617 மற்றும் இந்தியாவின் மகாராஷ்டிராவில் கண்டறியப்பட்ட B1.618 இனவகை என்றுதான் இதுநாள் வரை சொல்லப்பட்டுவந்தது. மற்ற எந்த கொரோனா வைரஸ் வகையை விட இவை அதிவேகமாகப் பரவும் எனச் சொல்லப்பட்டது. இந்த நிலையில் ஹைதராபாத்தில் உள்ள மத்திய அரசின் சி.சி.எம்.பி அறிவியல் ஆய்வு மையம் N440K என்னும் புதிய ரக கொரோனா (AP Corona Strain) வைரஸைக் கண்டுபிடித்துள்ளது. ஆந்திராவின் குர்னூல் மாவட்டத்தில் இந்த வைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது விசாகப்பட்டினத்திலும் இதன் தடங்கள் தென்படுகின்றன. மேலும் தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் ஆகிய பகுதிகளில் இந்த வைரஸ் வகை தொற்று அதிகம் காணப்படுகிறது. இது பிரிட்டிஷ் இனவகையை விட தொற்றுத்தன்மை 10 மடங்கு அதிகமானது என்கின்றனர்.
இதுகுறித்து விசாகப்பட்டினத்தின் கொரோனா சிறப்பு அதிகாரி பி.வி.சுதாகர் கூறுகையில், ‘மற்ற வகைகள் போல இல்லாமல் இந்த வைரஸுக்கான நோய் அறிகுறிகள் தோன்றும் கால இடைவெளி மிகக்குறைவானது. ஆனால் அறிகுறிகள் தோன்றிய சில மணிநேரங்களிலேயே தொற்று வேகமாகப் பரவத் தொடங்கிவிடுகிறது. முந்தைய கொரோனா பாதிப்புகளில் மூச்சுத்திணறல் பிரச்சனை சில நாட்களுக்கு பின்புதான் வரும். இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கு மூன்று நாட்களிலேயே வந்துவிடுகிறது’ என்றார். கொரோனா தொற்று அச்சத்தில் இருக்கும் மக்களை இந்தச் செய்தி மேலும் நம்பிக்கை இழக்கச் செய்திருக்கிறது.