Rahul Gandhi : ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது; அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? - சரவெடியாய் வெடித்த ராகுல்காந்தி
Rahul Gandhi : ஜனநாயகத்திற்கு ஆதரவாக என் பயணம் தொடரும்; அச்சமின்றி செயல்படுவேன் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்திற்காக தொடர்ந்து அச்சமின்றி குரல் கொடுப்பேன் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
தகுதி நீக்க விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து டெல்லியில் இந்திய தேசிய காங்கிரஸின் தலைமை அலுவலகத்தில் ராகுல்காந்தி செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்து வருகிறார். அப்போது பேசிய அவர், “இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. நாடாளுமன்றத்தில் என்னைப்பற்றி தவறான கருத்தை அமைச்சர்கள் கூறியுள்ளனர். நாடாளுமன்றத்தில் எந்த உறுப்பினராலும் அரசுக்கு எதிராக குற்றச்சாட்டை கூற முடியவில்லை. நாடாளுமன்றத்தில் அதானி குறித்து பேசியதன் எதிரொலியை உணர்கிறேன்” எனத் தெரிவித்தார்.
அதானி விவகாரத்தில் பிரதமர் என்னுடைய பேச்சை கண்டு அஞ்சுகிறார். அதனால்தான், என் மீது இந்த தகுதிநீக்க நடவடிக்கை எடுக்கப்படுள்ளது. பிரதமரின் அச்சத்தை திசைத்திருப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனக்கு உண்மையை பேசுவதில் மட்டுமே விருப்பம் உள்ளது. அதை தொடர்வேன். நான் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளேன்; கைது செய்யப்பட்டாலும், என் பணி தொடரும். ஜனநாயகத்திற்கான என் குரல் தொடர்ந்து ஒலிக்கும்; அதை யாராலும் ஒடுக்க முடியாது. இந்த நாடு எனக்கு அனைத்தையும் வழங்கியிருக்கிறது. மக்களுக்காக, நாட்டிற்காக தொடர்ந்து போராடுவேன் என்று பேசியுள்ளார்.
அதானி விவகாரம் குறித்து தொடர்ந்து பேசி வருகிறேன் என்பதற்காக இந்த நடவடிக்கைகளால் பிரச்சனையை மத்திய அரசு திசைத்திருப்புவதாக ராகுல் தெரிவித்துள்ளார். ஒருபோதும் என் செயல்பாடுகளைத் தடுக்க முடியாது. அதானி விவகாரத்தில் எழுப்பப்படும் கேள்விகளால் எழும் அச்சத்தை பிரதமரின் கண்களில் உணர முடிகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் ஜனநாயக உரிமையை பாதுகாப்பது, எளிய மக்களின் குரலாக ஒலிப்பது, மக்களிடம் உண்மை கொண்டு சேர்ப்பது ஆகியவற்றை என் பணியாக நினைக்கிறேன். பிரதமர் - அதானி ஆகியோர் இடையேயா உறவு குறித்த உண்மையை மக்களிடம் எடுத்துரைப்பேன் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து என்னை நிரந்தரமாக நீக்கினாலும், நான் என் பணியை தொடர்வேன் என்றும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். ஜனநாயக கட்டமைப்பு சிதைக்கப்படுவதற்கு தொடர்ந்து குரல் கொடுப்பேன்.