(Source: ECI/ABP News/ABP Majha)
மீண்டும் 1000 ரூபாய் நோட்டு அறிமுகமா?...அடித்து சொல்லும் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம்..!
2016ஆம் ஆண்டு, பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, பல்வேறு தரப்பினர் அதை வரவேற்றாலும் அதற்கு எதிராக கருத்து தெரிவித்த முதல் அரசியல் தலைவர் ப. சிதம்பரம் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்பார்த்தது போலவே 2000 ரூபாய் நோட்டு திரும்பப் பெறப்பட்டுள்ளது என்றும், 1000 ரூபாய் நோட்டு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
2016 பணமதிப்பிழப்பு நடவடிக்கை:
கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி எடுக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ரூ.500 மற்றும் ரூ.2000 ரூபாய் மதிப்பு நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்பணத்தின் புழக்கம் வெகுவாக குறைந்துவிட்ட நிலையில், அப்பணம் அச்சடிக்கப்படுவதும் 3 ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தப்பட்டுவிட்டது.
இந்நிலையில், 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்து நேற்று அறிவிப்பு வெளியிட்டது. எனவே, மக்கள் தங்கள் கையில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 30 ஆம் தேதி வரை வங்கி கணக்கில் டெபாசிட் செய்யலாம் அல்லது வங்கியில் மாற்றிக்கொள்ளலாம்.
மீண்டும் அதிர்ச்சி தந்த ரிசர்வ் வங்கி:
வங்கிகள் அதற்கான வசதியை மக்களுக்கு செய்யுமாறு ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டது. அதேபோல, செப்டம்பர் 30-ந் தேதி வரை மட்டுமே 2000 ரூபாய் நோட்டு செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் 23-ம் தேதியிலிருந்து 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையை முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தன் ட்விட்டர் பதிவில், “எதிர்பார்த்தது போன்றே மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளதோடு, பணத்தை மாற்ற செப்டம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் கொடுத்துள்ளது.
2000 ரூபாய் நோட்டுகள் மாற்றம் செய்வதற்கு கடினமானவை. நாங்கள் இதை நவம்பர் 2016லேயே கூறினோம். அதை தற்போது நிரூபித்திருக்கிறோம். மிகவும் அதிக புழக்கத்தில் இருந்த 50 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்த முட்டாள் தன நடவடிக்கையின் மீது ஒட்டப்பட்ட பேண்ட்-எய்ட் தான் இந்த 2000 ரூபாய் நோட்டு.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் சில வாரங்களுக்குப் பிறகு அரசும், ரிசர்வ் வங்கியும் 500 ரூபாய் நோட்டை மீண்டும் அறிமுகம் செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. அதேபோல, அரசும், ரிசர்வ் வங்கியும் மீண்டும் 1000 ரூபாய் நோட்டை அறிமுகம் செய்தால் நான் ஆச்சரியப்படமாட்டேன். பணமதிப்பிழப்பு நடவடிக்கை அதன் முழு சுற்றுக்கு வந்துவிட்டது” என்று விமர்சித்துள்ளார்.
2000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை விமர்சித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், "500 சந்தேகங்கள், 1000 மர்மங்கள், 2000 பிழைகள்! கர்நாடக படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம்! 2 ஆயிரம் ரூபாய் பணமதிப்பிழப்பு நடவடிக்கை" என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
2016ஆம் ஆண்டு, பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, பல்வேறு தரப்பினர் அதை வரவேற்றாலும் அதற்கு எதிராக கருத்து தெரிவித்த முதல் அரசியல் தலைவர் ப. சிதம்பரம் என்பது குறிப்பிடத்தக்கது.