(Source: ECI/ABP News/ABP Majha)
IPL 2025: "இங்க நான்தான் குயின்" ஐ.பி.எல். அணிகளின் தலையெழுத்தை எழுதப்போகும் ப்ரீத்தி ஜிந்தா!
IPL Auction 2025: ஐ.பி.எல். 2025ம் ஆண்டுக்கான ஏலம் இன்று நடைபெற உள்ள நிலையில் ஏலத்தில் மிகப்பெரிய சக்தியாக பஞ்சாப் அணி மாறியுள்ளது.
இந்திய அணி ஆடும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு நிகரான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட தொடர் ஐ.பி.எல். தொடர் ஆகும். 17 ஆண்டு காலமாக வெற்றிகரமாக நடைபெற்று வரும் இந்த தொடரின் 18வது சீசன் அடுத்தாண்டு நடக்க உள்ளது.
இன்று ஏலம்:
இந்த தொடரில் முன்னணி மற்றும் இளம் வீரர்கள் பலரும் புதிய அணிகளுக்காக ஆட உள்ளனர். இதற்காக இன்று சவுதி அரேபியாவில் பிரம்மாண்ட ஏலம் நடைபெற உள்ளது. ரிஷப்பண்ட், கே.எல்.ராகுல், ஸ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன், முகமது ஷமி, முகமது சிராஜ், ஹர்ஷல் படேல், சாஹல், வெங்கடேஷ் ஐயர் என இந்தியாவின் மிகவும் முக்கியமான வீரர்களும், வெளிநாட்டைச் சேர்ந்த பட்லர், சால்ட், ரபாடா, மிட்செல் ஸ்டார்க், மேக்ஸ்வெல் ட்ரெண்ட் போல்ட், ரச்சின் ரவீந்திரா, டி காக், வில் ஜேக்ஸ் ஆகியோர் ஏலத்தில் வருகின்றனர்.
ஆட்டத்தின் போக்கையே மாற்றும் வல்லமை கொண்ட இந்த வீரர்கள் ஏலத்தில் வருவதால் இவர்களை ஏலத்தில் எடுக்க 10 அணிகளும் போட்டி போடுவார்கள். 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை, சென்னை, அதிக ரசிகர்கள் பட்டாளம் கொண்ட ஆர்.சி.பி., ஹைதரபாத் அணிகள் இருந்தாலும் இந்த ஏலத்தில் மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்திருக்கும் அணி பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் ஆகும்.
பஞ்சாப் வசம் 110 கோடி ரூபாய்:
பஞ்சாப் அணியின் கைவசம் மொத்தம் ரூபாய் 110 கோடியோ 50 லட்சம் உள்ளது. அவர்களால் 15 இந்திய வீரர்களை ஏலத்தில் எடுக்க முடியும். 8 வெளிநாட்டு வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம். ஐ.பி.எல். தொடங்கப்பட்ட காலம் முதலே ஆடி வரும் பஞ்சாப் அணி ஒரு முறை கூட கோப்பையை வென்றது கிடையாது.
யுவராஜ், கில்கிறிஸ்ட், சங்ககரா, அஸ்வின், ஜார்ஜ் பெய்லி, கே.எல்.ராகுல், ஷிகர் தவான், மயங்க் அகர்வால், ஜெயவர்தனே என பலரும் கேப்டன்களாக இருந்தும் அவர்கள் ஒரு முறை கூட பட்டம் வென்றது இல்லை. ஷான் மார்ஷ், மேக்ஸ்வெல், கெயில், சேவாக் என பல ஜாம்பவான் வீரர்கள் அந்த அணிக்காக ஆடியுள்ளனர்.
பயிற்சியாளராக பாண்டிங்:
கடந்த சில வருடங்களாக பஞ்சாப் கிங்ஸின் செயல்பாடு மிக மிக மோசமானதாக உள்ளது. இந்த நிலையில், பஞ்சாப் அணியை முற்றிலும் புத்தம் புதியதாக அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. நடப்பு சீசன் முதல் வரும் 2028ம் ஆண்டு வரை பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக பாண்டிங்கை நியமித்துள்ளது பஞ்சாப்.
2000 காலகட்டத்தில் உலக கிரிக்கெட்டையே கலக்கியவர் பாண்டிங். அவரது தலைமையில் 3 உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா வென்றுள்ளது. அவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று நடக்கும் ஏலத்தில் பாண்டிங் பல வீரர்களை பஞ்சாப் பக்கம் இழுக்க திட்டமிட்டுள்ளார். அதில், அவரது முதல் குறிக்கோளாக ரிஷப்பண்ட் உள்ளார். ஏற்கனவே டெல்லியில் பாண்டிங் பயிற்சியில் ஆடிய ரிஷப் பண்ட் பஞ்சாப் அணிக்கு செல்லவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. RTM எனப்படும் வீரர்களை திரும்ப பெறும் கார்டு 4 பஞ்சாப் வசம் உள்ளது.
ப்ரீத்தி ஜிந்தாவின் ஏலம்:
இதனால், இந்த ஏலத்தில் பல முக்கிய வீரர்கள் எந்த அணிக்கு ஆடுவார்கள் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக ப்ரீத்தி ஜிந்தாவின் பஞ்சாப் மாறியுள்ளது. பல முன்னணி வீரர்களை பஞ்சாப் பக்கம் இழுப்பது மட்டுமின்றி, வீரர்களின் விலையை ஏற்றிவிட்டால் அவர்களை தங்கள் பக்கம் இழுக்க நினைக்கும் சில அணிகளின் எண்ணத்தையும் சிதறடிக்க பஞ்சாபால் முடியும். பஞ்சாப் அணி ஷஷாங்க் சிங் மற்றும் பிரப்சிம்ரனை மட்டுமே தங்கள் அணியில் தக்க வைத்துள்ளது.