9 கோடி மதிப்பிலான சொத்து... திருப்பதிக்கு கொடுத்து கெத்து.. தங்கையின் கடைசி ஆசையை நிறைவேற்றிய அக்கா!
சென்னையை சேர்ந்த பெண் தனது தங்கையின் கடைசி ஆசையை நிறைவேற்றும் விதமாக அவர் சம்பாதித்த 9 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை திருப்பதிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
சென்னையை சேர்ந்த ரேவதி விஸ்வநாத் என்ற பெண் தனது மாற்றுத்திறனாளி தங்கையின் கடைசி ஆசையை நிறைவேற்றும் விதமாக, தங்கை வாழ் நாள் முழுவதும் சம்பாதித்த 9 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை திருப்பதிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
சென்னை மயிலாப்பூரை சேர்ந்த ராஜகோபால் - மீனாட்சி தம்பதியினரின் மகள்கள் ரேவதி விஸ்வநாத் மற்றும் அவரது தங்கை பருவதம்மாள். மாற்றுத்திறனாளியான பருவதம்மாள் தனது விடா முயற்சியில் கல்வி கற்று பேராசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் மாற்றுத்திறனாளி என்ற காரணத்தினால் பருவதம்மாள் யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
பருவதம்மாளுக்கு திருப்பதி ஏழுமலையான் மீது இருந்த அதீத பக்தி சிறுவயது முதலே இருந்துள்ளது. இதன் காரணமாக தன் இறப்புக்கு பிறகு தான் சம்பாதித்த அனைத்து சொத்துக்களையும், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கொடுக்க வேண்டும் என தனது அக்காவிடம் சத்தியம் வாங்கியுள்ளார்.
இந்தநிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பருவதம்மாள் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இதை தொடர்ந்து அவர் வங்கியில் சேமித்து வைத்திருந்த 3 கோடியே 20 லட்சம் ரூபாய் பணம் மற்றும் சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆறு கோடி மதிப்பிலான இரண்டு வீடுகள் என மொத்தம் 9 கோடியே 20 லட்சம் ரூபாய் சொத்துகளை அவரது அக்கா ரேவதி திருப்பதி கோவிலுக்கு கொடுக்க முடிவு செய்தார்.
இதையடுத்து உறவினர்கள் முன்னிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டியிடம் ஒப்படைத்தார். பருவதம்மாள் குடும்பத்தாருக்கு சிறப்பு தரிசன ஏற்பாடுகள் தேவஸ்தானம் செய்து கொடுத்து, ரங்கநாயக்க மண்டபத்தில் வேத ஆசீர்வாதங்கள் முழங்க தீர்த்தம், லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
பருவதம்மாள் சார்பில் அவரது அக்கா ரேவதி கொடுத்த நன்கொடை திருப்பதியில் கட்டப்பட்டு வரும் குழந்தைகள் நல மருத்துவமனைக்காக செலவு செய்ய உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்