ரூ.120 கோடி சட்டவிரோத பணப் பரிவர்த்தனை.. பிஎஃப்ஐ மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
ரூ.120 கோடி சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
ரூ.120 கோடி சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில் பிஎஃப்ஐ நிர்வாகிகள் மூவரின் பெயரும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்த ஆவணம் திங்கள் கிழமை அதாவது நவம்பர் 21 ஆம் தேதி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷைலேந்திர மாலிக் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது. இந்த குற்றப்பத்திரிகையில் பர்வேஸ் அகமது, முகமது இலியாஸ், அப்துல் முகீத் ஆகியோரை குற்றவாளி என அறிவித்துள்ளது.
இதில் அகமது டெல்லி பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவராக இருந்தார். முகமது இலியாஸ் பொதுச் செயலாளராகவும் அப்துல் முக்கீத் அலுவலகச் செயலாளராக இருந்தவர்களாவார்.
கடந்த செப்டம்பர் 22 முதல் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தொடர்பான இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு , அமலாக்க இயக்குநரகம் மற்றும் மாநில காவல்துறை ஆகியவை தீவிர சோதனை நடத்தினர்.
முதற்கட்ட சோதனையில் பிஎஃப்ஐ அமைப்பைச் சேர்ந்த 106 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில், செப்டம்பர் 27ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்ட சோதனையில், PFI ஐச் சேர்ந்த 247 பேர் கைது செய்யப்பட்டனர். என்.ஐ.ஏக்கு இந்த அமைப்புக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் இந்த தடை செய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்தது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சட்டவிரோத அமைப்பாக அறிவித்து 5 ஆண்டுகள் தடை செய்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. மேலும் அதனோடு தொடர்புடைய துணை அமைப்புகளுக்கும் 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் 2 முறை சோதனை நடந்த நிலையில், இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. இந்த அமைப்பு மீதான தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் மத்திய அரசு தகவல் தெரிவித்தது.
சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு 5 ஆண்டுகள் தடை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கமளித்தது.
சிஏஏ சட்டத்திற்கு எதிராக வன்முறை தூண்டும் வகையில் PFI அமைப்பு செயல்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மீது தாக்குதல் நடத்த இந்த அமைப்பு திட்டமிட்டதாகவும் தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாக பண பரிமாற்ற விவகாரங்களில் ஈடுபட்டது தொடர்பாகவும் இந்த அமைப்பு ஈடுபட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டின் பாதுகாப்புக்கு எதிராக செயல்பட்டதாகவும், தீவிரவாதத்திற்கு ஆதரவாகவும் செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த அமைப்புக்கு சர்வதேச பயங்கரவாத குழுக்குழுடன் தொடர்பு உள்ளதற்கான பல சம்பவங்கள் நிகழ்ந்த உள்ளதாகவும் மத்திய அரசு அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, ரெகப் இந்தியா பவுண்டேஷன் (RIF), கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (CFI), அகில இந்திய இமாம்ஸ் கவுன்சில் (AIIC), தேசிய மனித உரிமைகள் அமைப்பு (NCHRO), நேஷனல் வுமன்ஸ் ஃப்ரண்ட், ஜூனியர் ஃப்ரண்ட், எம்பவர் இந்தியா ஃபவுண்டேஷன் மற்றும் ரிஹாப் பவுண்டேஷன், கேரளா போன்ற அமைப்புகளும் 5 ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.