கஸ்டமர்ஸ்-க்கு குஷி! இனி பேங்க் அக்கவுண்டில் ரீபண்ட்.. ஓலாவுக்கு மத்திய அரசு போட்ட உத்தரவு
வாடிக்கையாளர் புகார் எழுப்புகையில் பணத்தை வங்கி கணக்கில் செலுத்தாமல் கூப்பனாக மட்டுமே ஓலா வழங்கி வருகிறது.
சவாரி புக் செய்ய பயன்படும் முன்னணி ஆன்லைன் தளமான ஓலாவுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, நுகர்வோர் தங்கள் பணத்தைத் திரும்பப் பெறும்போது நேரடியாக தங்கள் வங்கிக் கணக்கில் அல்லது கூப்பன் வழியைத் தேர்வு செய்ய அனுமதிக்கும் ஒரு வழிமுறையை செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
ஓலாவுக்கு மத்திய அரசு உத்தரவு:
கூடுதலாக, ஓலா அதன் தளத்தின் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து ஆட்டோ சவாரிகளுக்கும் நுகர்வோருக்கு பில் அல்லது ரசீது அல்லது இன்வாய்ஸ் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது அதன் சேவைகளில் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்கிறது.
ஓலா பயன்பாட்டில் பணத்தைத் திரும்பப் பெறும்போது நுகர்வோர் ஏதேனும் குறைகளை எழுப்பும்போதெல்லாம், தன்னுடைய கொள்கையின் ஒரு பகுதியாக, கூப்பன் குறியீட்டை மட்டுமே ஓலா வழங்கியது. இது வங்கிக் கணக்கு மூலம் பணத்தைத் திரும்பப் பெறுதல் அல்லது கூப்பனைத் தேர்வுசெய்தல் என நுகர்வோருக்கு தெளிவான தெரிவை வழங்கவில்லை. கூப்பனை அடுத்த சவாரிக்கு பயன்படுத்தப்படலாம் என்றாலும் இது நுகர்வோர் உரிமைகளை மீறுவதாகும்.
மேலும், ஓலாவில் முன்பதிவு செய்யப்பட்ட ஆட்டோ சவாரிகளுக்கான கட்டணப்பட்டியலை ஒரு நுகர்வோர் அணுக முயற்சித்தால், 'ஓலாவின் ஆட்டோ சேவை நிபந்தனைகளில் மாற்றங்கள் காரணமாக ஆட்டோ பயணங்களுக்கான வாடிக்கையாளர் கட்டணப்பட்டியல் வழங்கப்படாது' என்ற தகவலை செயலி காட்டுகிறது என்பதை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் கவனித்தது.
ரீபண்ட் விவகாரம்:
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் விற்கப்பட்ட பொருட்கள் அல்லது சேவைகளுக்கான பில் அல்லது விலைவிவரப் பட்டியல் அல்லது ரசீது வழங்காமல் இருப்பது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ன் கீழ் 'நியாயமற்ற வர்த்தக நடைமுறை' என்பதும் கவனிக்கப்பட்டது.
முன்னதாக, குறைதீர்ப்பு அதிகாரி மற்றும் நோடல் அதிகாரி பற்றிய விவரங்கள் இணையதளத்தில் தெளிவாகத் தெரியவில்லை. இப்போது, குறைதீர்ப்பு அதிகாரி மற்றும் நோடல் அதிகாரியின் பெயர், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் ஆகியவை வலைத்தளத்தின் ஆதரவு பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளன.
ரத்துசெய்தல் கொள்கையின்படி ரத்துசெய்ய அனுமதிக்கப்பட்ட நேரம், இப்போது பயணத்தை முன்பதிவு செய்யும் நேரத்தில் தெளிவாகக் காட்டப்படும். ரத்துசெய்தல் கட்டணத் தொகையின் அளவு இப்போது சவாரி முன்பதிவு பக்கத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் நுகர்வோர் அவர் / அவள் ரத்து செய்வதற்கு முன் சவாரியை ரத்து செய்வதில் வசூலிக்கக்கூடிய தொகையை தெளிவாக அறிந்திருக்கிறார். ஏறுகின்ற மற்றும் இறங்குகின்ற இடங்கள் இரண்டின் முகவரியும் ஓட்டுனர்களுக்குக் காண்பிக்கப்படும் ஓட்டுனர்களுக்காக புதிய திரை சேர்க்கப்பட்டது.
சிரமம் மற்றும் குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக, நுகர்வோர் பயணத்தை ரத்து செய்ய விரும்பும் கூடுதல் காரணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.