பாஜக தலைவர்களைக் கண்டித்து நடைபெற்ற போராட்டங்களில் கல்வீச்சு.. 5 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு!
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ், சஹரன்பூர் ஆகிய பகுதிகளில் பாஜக தலைவர்களின் வெறுப்புப் பேச்சைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தின்போது நிகழ்ந்த கல்வீச்சு குறித்து காவல்துறையினர் பேட்டியளித்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ், சஹரன்பூர் ஆகிய பகுதிகளில் பாஜக தலைவர்களின் வெறுப்புப் பேச்சைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தின் போது நிகழ்ந்த கல்வீச்சு குறித்து காவல்துறையினர் பேட்டியளித்துள்ளனர். இதுகுறித்து பேசிய பிரயாக்ராஜ் காவல்துறை கண்காணிப்பாளர் அஜய் குமார், `இந்தப் போராட்டத்தின் மூளையாக செயல்பட்ட ஜாவித் அகமத் என்பவரைக் கைது செய்துள்ளோம். மேலும், பலர் இதே பட்டியலில் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.. காவல்துறை மீது சிறுவர்களை இந்த சமூக விரோதிகள் பயன்படுத்தியுள்ளார்கள்.. 29 முக்கிய குற்றங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.. குண்டர் சட்டத்திலும், தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது’ எனக் கூறியுள்ளார்.
பாஜக தலைவர்கள் நுபுர் ஷர்மா முதலானோர் முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதைக் கண்டித்து உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு நகரங்களில் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகைக்குப் பிறகு போராட்டங்கள் வெடித்தன.
சுமார் 70 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், அடையாளம் தெரியாத சுமார் 5 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரயாக்ராஜ் காவல்துறை கண்காணிப்பாளர் அஜய் குமார் தெரிவித்துள்ளார். மேலும் அவர், `இதுகுறித்து எந்த பின்னணியும் இதுவரை தெரியவில்லை.. அய்மிம் கட்சியைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் கூறப்படுகின்றன.. ஆதாரங்களைத் திரட்டி வருகிறோம்’ எனக் கூறியுள்ளார்.
பிரயாக்ராஜ் மாவட்ட மாஜிஸ்திரேட் சஞ்சய் குமார் கத்ரி, `இதுவரை 68 பேரைக் கைது செய்துள்ளோம்.. பாதுகாப்புப் படையினர் அதிக எண்ணிக்கையில் களமிறக்கப்பட்டுள்ளனர்’ எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, உத்தரப் பிரதேசத்தின் 6 மாவட்டங்களில் இருந்து சுமார் 130 பேரைக் கைது செய்ததாகக் கூறியிருந்தது.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் காவல்துறை சட்ட ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. பிரஷாந்த் குமார் இதுகுறித்து பேசிய போது, `போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என சஹரன்பூர் பகுதியில் 45 பேர், பிரயாக்ராஜ் பகுதியில் 37 பேர், அம்பேத்கர் நகர் பகுதியில் 23 பேர், ஹத்ரஸ் பகுதியில் 20 பேர், மொரதாபாத் பகுதியில் 7 பேர், பிரோசாபாத் பகுதியில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்’ எனக் கூறியிருந்தார்.
தொலைக்காட்சி விவாதம் ஒன்றில், பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா முகமது நபி குறித்து அவதூறாகப் பேசியதைக் கண்டித்து கடந்த வாரம் கான்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம் முழுவதும் எச்சரிக்கை விடப்பட்டதோடு, மாநிலம் முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்