Mahila Samman : மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பெண்களுக்கான சிறப்புத் திட்டம்; தெரிந்து கொள்ளவேண்டியவை என்னென்ன?
Mahila Samman Saving Certificate : 'மஹிளா சம்மான் சேமிப்பு திட்டம்
2023- 2024 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் பெண்களுக்கான சிறப்புத் திட்டமாக 'மஹிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ்' (Mahila Samman Saving Certificate) அறிமுகம் செய்யப்பட்டது. நாடு சுதந்திர அடைந்து 75-வது ஆண்டின் பெருமையை கொண்டாடி வரும் வேளையில், பெண்களுக்கான சிறு சேமிப்புத் திட்டமான இதன் கீழ் டெபாசிட் வசதி 7.5 சதவீத வட்டியுடன் இரண்டு ஆண்டுகளுக்கு இருக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். பெண்களுக்காக ஏற்கனவே மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவரும் நிலையில், இந்தப் புதிய அறிவிப்பில் என்னென்ன சிறப்பம்சங்கள் என்பது குறித்து கீழே காணலாம்.
'மஹிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ்'
இந்தத் திட்டத்தின் கீழ் மகளிர் மற்றும் பெண் குழந்தைகள் நிரந்தர வைப்பு தொகையாக வைக்க முடியும். இதில் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை வைப்பு தொகையாக வைக்க முடியும். மேலும், இது இரண்டு ஆண்டுகால திட்டமாகும். மார்ச், 2025 ஆம் ஆண்டு வரை இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும். 7.5 சதவீதம் இதற்கு நிலையான வட்டி வழங்கப்பட்டுள்ளது.
மகளிர் மற்றும் பெண் குழந்தைகளுக்கு தொடங்கப்படும் ஃபிக்சட் டெபாசிட்களுக்கு ( fixed deposits (FDs)) மாற்றாக இந்தத் திட்டத்தில் பயனடைய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்:
இந்தத் திட்டத்தில் கீழ் மகளிர் தங்கள் வருவாயில் இருந்து சிறிய அளவிலான தொகையை சேமிப்பதோடு அதற்கு 7.5% சதவீத வட்டியையும் பெற முடியும். இதில் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை செலுத்தலாம். குறுகிய கால சேமிப்புத் திட்டத்தில், வட்டித் தொகையை திட்டத்தின் முதிர்வு காலத்தின் முன்பே எடுத்துக்கொள்ள முடியும்.
சுகன்யா சம்ரிதி யோஜனா (செல்வ மகள் சேமிப்பு திட்டம்) - 'மஹிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ்' ; இரண்டு திட்டங்களும் ஒன்றா?
சுகன்யா சம்ரிதி யோஜனா என்பது பெண் குழந்தைக்கான சிறு சேமிப்புத் திட்டமாகும். இது தமிழில் செல்வ மகள் சேமிப்பு திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த சேமிப்புத் திட்டத்தின் கீழ் பெண் குழந்தையின் பெற்றோர்கள் மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி வந்தால் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும்போது (18 வயது) குறிப்பிட்டதொகை அவர்களுக்கு வழங்கப்படும். இதுதவிர்த்து, ஆண்டுக்கு சுமார் 7.6% வட்டி வழங்கப்படுகிறது.
பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது சட்டபூர்வமான பாதுகாவலர் குழந்தையின் சார்பாக தபால் அலுவலகம் அல்லது இந்த திட்டம் உள்ள வங்கிகளில் கணக்கைத் தொடங்கலாம். இந்தத் திட்டத்தைப் பெண் குழந்தைகளின் பெற்றோர் எதிர்கால சேமிப்பாகவும், வருமானம் ஈட்டும் முதலீடாகவும் கருதுகின்றனர்.
என்ன தகுதி?
* ஒரே ஒரு பெண் குழந்தை உள்ள பெற்றோருக்கு மட்டுமே இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
* செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் பதிவு செய்யும் பெண் குழந்தைக்கு 10 வயது நிரம்பியிருக்கக் கூடாது.
* இந்த திட்டத்தின்கீழ் செலுத்தும் தொகைக்கு வரி விலக்கு உண்டு.
* ஒருவர் மாதம் ரூ.2500 இந்த திட்டத்தில் சேமித்து வந்தால், முதலீடு முதிர்வடையும் போது சுமார் ரூ.12,00,000 வரை கிடைக்கும்.
'மஹிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ்' திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகள் மட்டுமல்ல, மகளிரும் இதன் கீழ் பயன்பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்தபட்ச தொகை குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.
அதேபோல செல்வ மகள் திட்டத்தின் கீழ் 18 வயது பூர்த்தியடைந்த பிறகே முதிர்வு தொகையை எடுக்க முடியும். ஆனால், 'மஹிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ்' திட்டத்தில் அப்படியில்லை. இதன் சிறப்பம்சங்கள் குறித்து கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.