Brindavan Express : "பெங்களூரில் இருந்து சென்னை வரும் பிருந்தாவன் ரயில் 3 மணி நேரத்திற்கு மேல் தாமதம்” தவித்து கிடக்கும் பயணிகள்..!
”இதே நிலை நீடித்தால் இரவு 9 மணிக்கு சென்னை வந்திருக்க வேண்டிய ரயில் இரவு 12 மணிக்கு மேல்தான் சென்னை வந்தடையும்”
பெங்களூரில் இருந்து பிற்பகல் 3.25 மணிக்கு கிளம்பிய பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 9.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை அந்த ரயில் சென்னை வந்து சேராததால் பயணிகளும் அவர்களது உறவினர்களும் தவித்துப் போய் உள்ளனர்.
சிக்னல் கோளாறால் தாமதம் என தகவல்
பெங்களூரில் இருந்து ரயில் கிளம்பியதில் இருந்து இடையிடையே ஏற்பட்ட சிக்னல் பிரச்னையால் ஒவ்வொரு ரயில் நிலையத்தை அடைவதிலும் தாமதம் ஏற்பட்டு வருகிறது. தொடக்கத்தில் 15 நிமிட தாமதத்தில் தொடங்கி, ஒரு மணி நேரம், 2 மணி நேரம் என அவ்வப்போது ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளது. அங்கங்கு ஏற்பட்ட சிக்னல் பிரச்னையை சரி செய்த பிறகு கிட்டத்தட்ட 3 மணி நேர தாமதத்துடன் ரயில் சென்னையை நோக்கி வந்துக்கொண்டிருக்கிறது.
மாலை 5.30 மணிக்கு ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வந்தடைந்திருக்க வேண்டிய பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில், ஒரு மணி நேரம் 10 நிமிடங்கள் தாமதமாக 6 மணி 40 நிமிடங்களுக்கு வந்தடைந்திருக்கிறது. வாணியம்பாடி ரயில் நிலையத்திற்கு 5.43 மணிக்கு வந்திருக்க வேண்டிய ரயில் இரவு 7.02 மணிக்கே வந்திருக்கிறது.
தற்போதைய கணக்கின்படி, பிருந்தாவன் ரயில் சென்னை செண்ட்ரயில் ரயில் நிலையத்தை வந்தடைய இரவு 12 மணிக்கு மேல் ஆகலாம் என ரயில்வே துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிகாரிகளின் அலட்சியமே காரணமா ?
ரயிலின் இந்த தாமதத்தில் பல்வேறு திட்டமிடலுடன் சென்னை வரவேண்டிய பயணிகள் கடும் அவதியடைந்து வந்துள்ளனர். பயணிகள் குறித்த நேரத்திற்கு சென்னை வந்து சேராததால் அவர்களது உறவினர்களும் கவலையடைந்துள்ளனர்.
ரயிலின் இந்த பெரும் தாமதத்திற்கு முறையான காரணங்கள் ஏதும் பயணிகளுக்கு முறையாக தெரிவிக்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. சிக்னல் கோளாறு மட்டுமே காரணமா ? அல்லது வேறு ஏதும் காரணமாக இருக்குமா ? என்று ரயிலில் பயணிக்கு பல நூறு பேர் கவலையுடன் எப்போது சென்னை சென்று சேர்வோம் என்று கவலையுடன் கம்பார்ட்மெண்டிலேயே காத்திருக்கின்றனர்.
குழந்தைகளோடு பலர் பயணிப்பதால் இரவு உணவு, தண்ணீர் உள்ளிட்டவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இரவு 12 முதல் 1 மணிக்கே சென்னை வர வாய்ப்பு
இதே தாமதம் நிலவினால், இரவு 9.10 மணிக்கு சென்னை வரவேண்டிய ரயில், நள்ளிரவு 12 மணியை தாண்டியே சென்னை வரும் என கூறப்படுகிறது.