புதுச்சேரியில் முதன் முறையாக சபாநாயகர் நாற்காலியில் இடம்பிடித்தது பாஜக..!
புதுச்சேரி 15-வது சட்டப்பேரவையின் சபாநாயகராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட பா.ஜ.கவின் எம்.எல்.ஏ செல்வம், இன்று சபாநாயகராக பதவியேற்றுக் கொண்டார்.
2021 சட்டப்பேரவை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால் அமைச்சரவை பங்கீடு தொடர்பாக இருதரப்புக்கும் இழுபறி நீடித்துவந்ததால் எதிர்கட்சிகளும், பொதுமக்களும் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர். இந்நிலையில்தான் சபாநாயகருக்கான தேர்தல் இன்று நடைபெறும் என்று சட்டப்பேரவை செயலாளர் முனுசாமி அறிவித்திருந்தார். அதனடிப்படையில் என்.ஆர் காங்கிரஸ், பா.ஜ.க கூட்டணி சார்பில் மணவெளி தொகுதியின் பா.ஜ.க எம்.எல்.ஏவான செல்வம் தனது வேட்பு மனுவை நேற்று முன்தினம் 14.06.2021 அன்று தாக்கல் செய்தார்.
முதல்வர் ரங்கசாமி, பா.ஜ.கவின் சட்டமன்ற கட்சித் தலைவர் நமச்சிவாயம் மற்றும் கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏக்கள் முன்மொழிந்தும், வழிமொழிந்தும் 8 மனுக்களை தாக்கல் செய்தனர். நேற்று மதியம் 12 மணியுடன் வேட்புமனு தாக்கலுக்கான காலக்கெடு முடிவடைந்தது. இதற்கிடையே சபாநாயகர் தேர்தலுக்காக வேறு எம்.எல்.ஏக்கள் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. அதனால் எம்.எல்.ஏ செல்வம் போட்டியின்றி சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து இன்று காலை 9.30 மணிக்கு புதுச்சேரியின் 15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியது.
புதுச்சேரி சட்டப்பேரவையில் இதுவரை 20 பேர் சபாநாயகராக பதவி வகித்திருக்கின்றனர். 1963-ம் ஆண்டு முதல் சபாநாயகராக காங்கேயன் பதவி வகித்தார். அவரையடுத்து எம்.ஓ.ஹெச்.பாரூக், சண்முகம், மாணிக்கவாசகம், பெருமாள், செல்வராஜன், பாக்கியம், காந்தி, காமிசெட்டி ஸ்ரீபரசுராமா, வரபிரசாத ராவ், சந்திரகாசு, பழனிராஜா, கண்ணன், வி.எம்.சி சிவக்குமார், ஏ.வி சுப்பிரமணியன், எம்.டி.ஆர் ராமச்சந்திரன், ராதாகிருஷ்ணன், சபாபதி, வைத்திலிங்கம், வி.பி.சிவக்கொழுந்து ஆகியோர் சபாநாயராக பதவி வகித்தனர். அந்த வரிசையில் 21-வது சபாநாயகராக தற்போது பா.ஜ.க எம்.எல்.ஏ செல்வம் பதவியேற்றிருக்கிறார். புதுச்சேரியில் பதவியேற்ற முதல் பா.ஜ.க சபாநாயகர் இவர். அதேபோல 2001 தேர்தலுக்குப் பின் தற்போதுதான் பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் வெற்றிபெற்று சட்டப்பேரவைக்குள் நுழைந்திருக்கிறார்கள்,
அதே நேரத்தில், தேர்தலில் வென்று 45 நாட்களாகியும் அமைச்சரவை இன்னும் புதுச்சேரியில் பதவியேற்காததால் ஆளுங்கட்சி எம்எல்ஏக்களே கடும் அதிருப்தியில் உள்ளனர். குறிப்பாக கொரோனா பெருந்தொற்று உள்ள சூழ்நிலையில் ஆட்சியாளர்கள் அலட்சியத்தால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக மாற்று கட்சிகளும், சமூக செயல்பாட்டாளர்களும் கருத்து தெரிவிக்கின்றனர். கடந்த ஐந்து ஆண்டு கால காங்கிரஸ் - திமுக ஆட்சியில் ஆட்சியாளர் ஆளுநருக்கு இடையே நிலவி வந்த அதிகார மோதல் போக்கு காரணமாக பல துறைகள் சார்ந்த பணிகள் செயல்படுத்த முடியாமல் போனது. இதனால் பொது மக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகினர். இந்நிலையில் தற்போது பொறுப்பேற்றிருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மக்கள் பணிகளை விரைந்து செயல்படுத்தும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், பதவி மற்றும் முக்கிய இலாகாவை கைப்பற்றுவதில் இந்த அரசு குறியாக இருந்ததால், இது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது, இதுபோன்ற பேரிடர் காலங்களில் அரசியல் செய்வது முறையானது அல்ல, இந்த நேரத்தில் யார் இறங்கி வேலை செய்கிறார்களோ அவர்களே மக்கள் தலைவராக உருவெடுக்க முடியும் என்கின்றனர்.