Goa CM Name: கோவாவின் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் மீண்டும் தேர்வு..!
கோவா மாநிலத்தின் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட், கோவா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கான தேர்தலில் பஞ்சாப் தவிர பிற 4 மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தது. கோவா மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 20 தொகுதிகளில் வெற்றி பெற்ற பா.ஜ.க. மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது.
கோவா மாநிலத்தின் புதிய முதல்வர் யார்? என்று எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில் அந்த மாநிலத்தின் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த பா.ஜ.க. ஆட்சியின் முதல்வராக பொறுப்பு வகித்தவர்.
பிரமோத் சாவந்திற்கும், விஸ்வஜித் ரானேவிற்கும் இடையே முதல்வர் பதவியை பிடிப்பதில் கடும் போட்டி நிலவியது. இவர் பிரமோத் சாவந்தின் கடந்த ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர். இமாச்சல பிரதேசத்தின் ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பெயரும் முதல்வர் பதவிக்கான பட்டியலில் அடிபட்டது. இந்த நிலையில், கோவாவின் முதல்வராக மீண்டும் பிரமோத் சாவந்த் பதவியேற்க உள்ளார். அவரின் பதவியேற்பு விழா வரும் 23ந் தேதி அல்லது 25-ந் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக கோவாவில் ஆட்சியமைப்பதற்காக அமைக்கப்பட்ட பா.ஜ.க. நிர்வாகிககளான மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், எல்.முருகன், மகாராஷ்ட்ரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், கர்நாடக அமைச்சர் டி.ரவி மற்றும் தனவாடே ஆகியோர் பா.ஜ.க.வின் முதல்வர் யார் என்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் பரிந்துரைப்படி பிரமோத் சாவந்த் மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கோவா மாநிலத்தின் 20 தொகுதியை கைப்பற்றிய பா.ஜ.க. 2 தொகுதிகளை கைப்பற்றிய மகாராஷ்ட்ரவதி கோமன்டக் கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்கள், சுயேட்சை எம்.எல்.ஏ. ஒருவரின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உள்ளது. கோவாவில் பா.ஜ.க.விற்கு கடும் நெருக்கடி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் 11 இடங்களை மட்டுமே பிடித்தது. ஆம் ஆத்மி கட்சி 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சுயேட்சைகள் மொத்தம் 3 இடங்களிலும், கோவா பார்வர்ட் பார்ட்டி 1 இடங்களிலும், ரிவலுஷனரி கோன்ஸ் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.
மேலும் படிக்க : CUET: மத்திய பல்கலைக்கழகம் சேர்க்கைக்கு நுழைவு தேர்வு கட்டாயம்: யுஜிசி விளக்கம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்