உ.பி. சட்டமன்றத் தேர்தலில் ’பரபர’ பாஜக : கட்சி, ஆட்சியில் புது நியமனங்கள் ..!
கொரோனா முதல் அலையை சரிவரக் கையாளாமல் கடும் அதிருப்தியை எதிர்கொண்டார், முதலமைச்சர் ஆதித்யநாத்.
அடுத்த ஆண்டின் மத்தியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள உத்தர பிரதேசத்தில், ஆளும் பாஜக அதற்குத் தயாராகத் தொடங்கிவிட்டது. மோடிக்கு அணுக்கமான அரவிந்த் சர்மா அந்த மாநில பாஜக துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆளும் பாஜக தரப்பில் பத்து நாள்களுக்கு முன்னர் பகிரங்கமாக வெளியில்வந்த உள்கட்சி மோதல் சுமுகமாக தீர்க்கப்பட்டது. கொரோனா முதல் அலையை சரிவரக் கையாளாமல் கடும் அதிருப்தியை எதிர்கொண்டார், முதலமைச்சர் ஆதித்ய நாத். அவர் மீது சக அமைச்சர்கள், பா.ஜ.க. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சித் தலைமையிடம் அதிருப்தியுடன் புகார் தெரிவித்தனர். இதையொட்டி இரண்டு வாரங்களுக்கு முன்னர் லக்னோவில் முகாமிட்ட பாஜகவின் பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ் அதிருப்தியாளர்களுடன் தனித்தனியாகப் பேசினர். பின்னர் டெல்லிக்கு அழைக்கப்பட்ட ஆதித்யநாத்திடம், பாஜக தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி என வரிசையாக அறிவுரை வழங்கினர். (இதை அவரே வெளிப்படுத்தியிருக்கிறார்.)
கொரோனாவுக்கு பலியான மூன்று அமைச்சர்களுக்குப் பதிலாக காலியிடங்களில் புதியவர்களை நியமித்தாக வேண்டும் என்பதால், அமைச்சரவை மாற்றம் குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. அதில் குறிப்பாக மாநிலத்தில் கணிசமாக இருக்கும் பிராமணர்களின் அதிருப்தியைச் சமாளிக்க, அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கான முக்கியத்துவம் அதிகமாகும்படி மாற்றம் அமையும் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், மாநில எஸ்சி/ எஸ்டி ஆணையத்தில் 18 பேரை நியமித்து அதை மறுசீரமைப்பு செய்திருக்கிறது, ஆதித்யநாத் அரசாங்கம். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அல்லோபதி மருத்துவருமான ஆக்ரா ராம்பாபு அரித், ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டு துணைத்தலைவர்களில் ஒருவராக சாஜகான்பூர் பகுதியின் தலித் தலைவரான மிதிலேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் முலாயம்சிங்கின் சமாஜ்வாதி கட்சியின் சார்பில் போட்டியிட்டவர். இன்னொருவர், சோன்ப்கத்ரா பகுதி பாஜகவைச் சேர்ந்த தலித் பிரமுகர் இராம் நரேஷ் பாஸ்வான் ஆவார்.
பாஜகவின் மாநில எஸ்சி/எஸ்டி பிரிவு முன்னாள் செயலாளர் இராம் சிங் வால்மீகி முதல் முறையாக இந்த ஆணையத்தின் உறுப்பினராக ஆக்கப்பட்டுள்ளார். இவருக்கு முதல் முறையாக இப்படியான பதவி அளிக்கப்பட்டு இருக்கிறது. கட்சித் தலைமை சிறந்த தொண்டர்களை அடையாளம் கண்டு, அங்கீகரிக்கிறது என்கிறார். அதிகாரமட்டத்தில் மேல்நிலை சாதியினருக்கும் தலித் மக்களுக்கும் இடையில் இணைப்பை ஏற்படுத்துவதற்காக ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவால் கூட்டாக ஏற்பாடுசெய்யப்படும் சமரஸ்த போஜ் எனும் சமூக நல்லிணக்க பந்தியில் இவர் முக்கிய பங்காற்றிவருகிறார். லக்னோவின் பிரபலமான இன்னொரு தொண்டர் இரமேஷ் டூஃபானிக்கும் ஆணைய உறுப்பினர் பதவி தரப்பட்டுள்ளது.
இவர்களைத் தவிர, சமாஜ்வாதி கட்சியிலிருந்து வந்த சம்பல் பள்ளத்தாக்கு பகுதியைச் சேர்ந்த சாத்வி கீதா பிரதான், அலிகார் பகுதியின் ஓம் பிரகாஷ் நாயக் ஆகியோருக்கு இரண்டாவது முறையாக பதவி அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் நாயக், இப்போதைய இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னர் உத்தரப்பிரதேச முதலமைச்சராக இருந்தபோது அவரின் அமைச்சரவையில் இணையமைச்சராக இருந்துள்ளார். என்னுடைய பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது; கட்சிக்கு நன்றியுடன் இருப்பேன் என்கிறார் இந்த முன்னாள் அமைச்சர். பாஜகவுக்காக களத்தில் வேலைசெய்பவர்களுக்கு திடீர் முக்கியத்துவம் அளித்து, பழையவர், புதியவர் எனப் பார்க்காமல் பதவி வழங்கியது கைகொடுக்கும் என அக்கட்சி நம்புவதையே இது காட்டுகிறது.
எதிர்த்தரப்பிலோ, பிஎஸ்பி 7 சட்டமன்ற உறுப்பினர்களை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் சந்தித்தது தொடர்பாக, இரண்டு கட்சிகளும் பேட்டி, அறிக்கை சண்டையில் தீவிரமாக இருக்கின்றனர். கடந்த சில நாள்களாக உ.பி. அரசியலில் அது ஓர் அரசியல் சூட்டைக் கிளப்பிவிட்டபடி இருக்கிறது.