Gujarat BJP Candidates 2022 List: குஜராத் தேர்தல்..ரவீந்திர ஜடேஜாவின் மனைவிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு..! லிஸ்ட் வெளியிட்ட பாஜக
பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் டிசம்பர் 1 மற்றும் 5 தேதிகளில், குஜராத் சட்டப்பேரவை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. டிசம்பர் 8ஆம் தேதி, இமாச்சலப் பிரதேசத்துடன் இணைத்து வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
குஜராத்தில் மொத்தமுள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளில் 89 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக டிசம்பர் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும்.
இந்நிலையில், பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், 160 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல், முன்னாள் மோர்பி எம்எல்ஏ காந்திலால் அம்ருத்யா, கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா, ஹர்திக் படேல் உள்ளிட்ட முக்கிய நபர்களின் பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
அதன்படி, முதலமைச்சர் பூபேந்திர படேல் கட்லோடியா தொகுதியில் போட்டியிடுகிறார். ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா ஜம்நகர் உத்தம் தொகுதியில் களமிறங்குகிறார்.
சமீபத்தில், மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அதில், 130க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். விபத்தின்போது, பாலத்தில் இருந்து கிழே விழுந்த மக்களை காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்ததாகக் கூறப்படும் முன்னாள் எம்எல்ஏ காந்திலால் அம்ருத்யாவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி மஜுரா தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஹர்திக் படேல், விரும்காம் தொகுதியில் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
கட்சியின் வேட்பாளர்களை இறுதி செய்ய புதன்கிழமை அன்று நடைபெற்ற பாஜக மத்திய தேர்தல் குழுவின் கூட்டத்திற்குப் பிறகு இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் நடைபெற்ற தேர்தலில் கடும் போட்டிக்கு இடையே, பாஜக 99 இடங்களையும், பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் 77 இடங்களையும் கைப்பற்றியது.
தொடர்ந்து ஏழாவது முறையாக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற வரலாறு படைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. ஆட்சிக்கு எதிரான மனநிலையை எதிர்கொள்ள பல்வேறு மூத்த தலைவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.
அந்த வகையில், இளைஞர்களுக்கும் புதிய முகங்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என கட்சிக்குள் பேசப்பட்டு வந்தது.குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி, முன்னாள் துணை முதலமைச்சர் நிதின் படேல் மற்றும் இரு மூத்த தலைவர்களான பூபேந்திரசிங் சுடாசமா மற்றும் பிரதீப்சிங் ஜடேஜா ஆகியோர் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
தற்போது, 182 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவையில், காங்கிரசை சேர்ந்த பல எம்.எல்.ஏக்கள் அக்கட்சியில் இருந்து விலகியதால், பாஜவின் பலம், 111 ஆக உயர்ந்துள்ளது. இந்த தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி கடும் போட்டி அளிக்கும் என்றும் கருத்துக்கணிப்புகளில் தகவல் வெளியாகியுள்ளது.