பிரதமர் மோடிக்கு எதிராக கொந்தளித்த உலக பணக்காரர்...இந்தியர்கள் பதிலடி கொடுக்க மத்திய அமைச்சர் தடாலடி..!
பிரதமர் மோடியும் அதானியும் நெருங்கிய கூட்டாளிகள் என்றும் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி அமைதி காக்கிறார் என்றும் உலக பணக்காரர்களில் ஒருவரான ஜார்ஜ் சோரோஸ் சாடியுள்ளார்.
அதானி விவகாரம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் எனும் நிறுவனம் கடந்த 2 அண்டுகளாக, அதானி குழுமத்தின் முன்னாள் நிர்வாகிகள், அதிகாரிகள், பங்குதாரர்கள் என பலரிடம் கருத்துக்களைக் கேட்டு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதன்படி, ”அதானி குழுமம் பங்குசந்தையில் ஏராளமான மோசடி வேலைகள் செய்துள்ளது. ரூ.17.80 லட்சம் கோடி மதிப்பிலான தொகைக்கு அதானி குழுமம் பங்குச்சந்தையில் மோசடி செய்து, பங்குகளை திருத்தியுள்ளது” என குற்றம்சாட்டியுள்ளது.
அதானி விவகாரம்: பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும்:
இந்நிலையில், இந்த விவகாரத்தை முன்வைத்து உலக பணக்காரர்களில் ஒருவரான ஜார்ஜ் சோரோஸ், பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். பிரதமர் மோடியும் அதானியும் நெருங்கிய கூட்டாளிகள் என்றும் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி அமைதி காக்கிறார் என்றும் சாடியுள்ளார்.
அதானி சிக்கல் இந்தியாவில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க வித்திடும் என்றும் இதற்கு, பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கு பாஜக கடுமையாக எதிர்வினை ஆற்றியுள்ளது. ஜார்ஜ் சோரோஸின் விமர்சனத்திற்கு பதில் அளித்துள்ள மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, "இந்திய ஜனநாயகத்தில் தலையிட முயற்சிக்கும் வெளிநாட்டு சக்திகளுக்கு இந்தியர்கள் ஒன்றிணைந்து பதிலடி கொடுக்க வேண்டும்" என நாட்டு மக்களை கேட்டு கொண்டுள்ளார்.
உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் வெளிநாட்டு சக்திகள்:
"நமது உள்விவகாரங்களில் தலையிட முயலும் இத்தகைய வெளிநாட்டு சக்திகளை இந்தியர்கள் தோற்கடித்துள்ளனர், மீண்டும் அவ்வாறு செய்வார்கள். ஜார்ஜ் சொரோஸுக்கு தகுந்த பதிலடி கொடுக்குமாறு ஒவ்வொரு இந்தியரையும் கேட்டுக்கொள்கிறேன்.
இங்கிலாந்து வங்கியை திவால் ஆக்கியவர். பொருளாதாரப் போர்க்குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவர். இப்போது இந்திய ஜனநாயகத்தை உடைக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை உச்சரித்துள்ளார். ஜார்ஜ் சொரெஸ், ஒரு சர்வதேச தொழிலதிபர். இந்திய ஜனநாயகத்தில் தலையிடுவேன் என தனது தவறான நோக்கத்தை அறிவித்துள்ளார்.
இத்தகைய சக்திகள், தங்கள் கைப்பாவைகளை அதிகாரத்தில் இருப்பதை உறுதி செய்வதற்காக மற்ற நாடுகளில் உள்ள அரசாங்கங்களை வீழ்த்த முயற்சிக்கின்றனர். விமர்சிக்கலாம், ஆனால் இந்தியா மீதான தாக்குதலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று பிரதமர் மோடி பலமுறை கூறியுள்ளார்" என்றார்.
"இந்தியா-அமெரிக்க உறவுகள் வலுப்பெற்று வரும் நிலையில், உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவாகி வரும் வேளையில், நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். இந்த சக்திகளுக்கு பிரதமர் மோடி அடிபணிய மாட்டார் என்பதை தெரிவிக்க வேண்டும்" என மத்திய அமைச்சர் கூறினார்.
2023 முனிச் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய உலக பணக்காரர் ஜார்ஜ் சொரெஸ், "அதானியின் தொழில் பிரச்சனைகளால் பிரதமர் மோடி பலவீனமடைவார்" என்றும் கூறியிருந்தார்.