26 வருடங்கள் ஊடக அனுபவம்.. ABP குழும தலைமை செயல் அதிகாரி அவினாஷ் பாண்டேவுக்கு பெருமைமிகு பதவி..
ஊடகத் துறையின் பெருமைமிகு பதவிக்கு, 26 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட ABP செய்தி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அவினாஷ் பாண்டே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
NBDA எனும் தேசிய செய்தி ஒளிபரப்பாளர்கள் & டிஜிட்டல் சங்கத்தின் (NBDA - News Broadcasters & Digital Association) புதிய தலைவராக ABP செய்தி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அவினாஷ் பாண்டே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்பு அப்பதவி வகித்த ரஜத் சர்மா அப்பதவியில் இருந்து விலகியதை அடுத்து புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ரஜத் சர்மா 6 ஆண்டுகளாக என்பிடிஏ (NBDA) தலைவராக பதவி வகித்து வந்த நிலையில், தானாக முன்வந்து அப்பதவியை ராஜினாமா செய்தார். தற்போது தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட அவினாஷ் பாண்டே, முன்பு துணைத் தலைவராக பதவி வகித்து வந்தார்.
இதற்கிடையில், என்பிடிஏ துணைத் தலைவராக மாத்ருபூமி பிரிண்டிங் & பப்ளிஷிங் கோ. லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம்.வி. ஷ்ரேயாம்ஸ் குமார் பொறுப்பேற்றுள்ளார்.
நியூஸ்24 பிராட்காஸ்ட் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அனுராதா பிரசாத் சுக்லா 2022-23 ஆம் ஆண்டிற்கான சங்கத்தின் கௌரவப் பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை நடைபெற்ற என்பிடிஏ இயக்குநர்கள் கூட்டத்தின் போது இந்த நியமனங்கள் நடைபெற்றன.
தலைவராக தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்து பேசிய அவினாஷ் பாண்டே, "முக்கியத்துவம் வாய்ந்த மாற்றங்கள் நிகழ்ந்து வருவதை கருத்தில் எடுத்து கொண்டு பார்த்தால் இது ஒரு பெரிய பொறுப்பாகும். தெளிவில்லாத கடினமான காலத்தில் எங்களை வழிநடத்தியதற்காக ராஜத் சர்மாவுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் அதன் நிர்வாகம், தொழில் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.
இது தொடர்பாக பேசிய ராஜத் சர்மா, "கடந்த சில ஆண்டுகள், செய்தி ஒளிபரப்பாளர்களுக்கு மிகவும் சவாலானதாக இருந்தது. சங்கம், ஒவ்வொரு நெருக்கடியையும் ஒரு குழுவாகப் எதிர்கொண்டு, ஒவ்வொரு போரையும் வென்றதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். என்பிடிஏவில் என்னுடன் மிக நெருக்கமாகப் பணியாற்றிய அவினாஷுக்கு தலைவர் பதவியை ஒப்படைப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். பல ஆண்டுகளாக நாம் கூட்டாக கட்டியெழுப்பிய பாரம்பரியத்தைக் கட்டிக்காத்து, அவர் சிறப்பாக வபணியாற்றவேண்டும்" என்றார்.
2005 ஆம் ஆண்டு முதல் ஏபிபி குழுமத்தில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய அவினாஷ் பாண்டே ஜனவரி 2019 இல் ஏபிபி நெட்வொர்க்கின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பதவியேற்றார். ஊடகத்துறையில் அவருக்கு 26 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளது.
NBDA எனும் தேசிய அளவிலான செய்தி ஒளிபரப்பாளர்கள் & டிஜிட்டல் சங்கம் என்பது, இந்திய ஊடகத்துறையின் மிக முக்கியமான ஊடகச்சங்கங்களில் ஒன்று. இந்தியா முழுவதும் செயல்படுகின்ற செய்தி நிறுவனங்கள், தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளங்களின் சார்பாக இந்த சங்கம் இயங்கி வருகிறது. இச் சங்கத்தின் தலைவர் பதவி என்பது பெருமைமிகு பதவியாக கருதப்படுகிறது. அப்படியொரு பொறுப்புதான், தற்போது ABP செய்தி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அவினாஷ் பாண்டேவை தேடி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டைம்ஸ் நெட்வொர்க்கின் நிர்வாக இயக்குனரும் தலைமை செயல் அதிகாரியுமான எம்.கே. ஆனந்த், TV18 பிராட்காஸ்ட் லிமிடெடின் நிர்வாக இயக்குனர் ராகுல் ஜோஷி, ஈநாடு டெலிவிஷன் பிரைவேட். லிமிடெட் இயக்குனர் ஐ. வெங்கட், டிவி டுடே நெட்வொர்க் லிமிடெடின் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கல்லி பூரி பந்தல், என்டிடிவி-இன் செய்தி பிரிவு இயக்குநர் சோனியா சிங், ஜீ மீடியா கார்ப்பரேஷன் லிமிடெடின் அனில் மல்ஹோத்ரா ஆகியோர் சங்கத்தின் உறுப்பினர்களாக உள்ளனர்.