Arvind Kejriwal: டெல்லியில் சர்வாதிகாரம்.. ஆளுநருக்கே உச்சபட்ச அதிகாரம் - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேதனை
டெல்லியில் துணை நிலை ஆளுநருக்குதான் உச்சபட்ச அதிகாரம். மக்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம். ஆனால், டெல்லியை மத்திய அரசுதான் இயக்கும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் வேதனை தெரிவித்துள்ளார்.
![Arvind Kejriwal: டெல்லியில் சர்வாதிகாரம்.. ஆளுநருக்கே உச்சபட்ச அதிகாரம் - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேதனை Arvind Kejriwal Big Warning For Other States Amid Tussle With Centre Arvind Kejriwal: டெல்லியில் சர்வாதிகாரம்.. ஆளுநருக்கே உச்சபட்ச அதிகாரம் - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேதனை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/11/dff7692f013702c63024dc35f95d45451686496504758729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, டெல்லி ஆகிய எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே தொடர் மோதல் போக்கு நிலவி வருகிறது.
அவசர சட்ட விவகாரம்:
குறிப்பாக, டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கும், மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கும் துணை நிலை ஆளுநருக்கும் உச்சகட்ட அதிகார போட்டி நிலவி வருகிறது. இந்த பிரச்னை ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமிக்கும் விவகாரத்தில் விஸ்வரூபம் எடுத்தது. இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யவும் நியமிக்கவும் மாநில அரசுக்கே முழு அதிகாரம் உள்ளது; அமைச்சரவை முடிவுகளுக்கு ஆளுநர் உட்பட்டவர் என்றும் உச்சநீதிமன்றம் டெல்லி அரசுக்கு சாதகமாக அண்மையில் தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பை தொடர்ந்து மத்திய அரசு, அவசர சட்டம் கொண்டு வந்து, டெல்லி அரசில் அதிகாரிகளின் நியமனம், பணியிடமாற்றம் போன்ற விஷயங்களில் முடிவு எடுக்கும் அதிகாரம் துணை ஆளுநருக்கு வழங்கப்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கு, இந்த அவசர சட்டம் பெரும் தலைவலியை தந்துள்ளது.
மற்ற மாநிலங்களை எச்சரிக்கும் அரவிந்த் கெஜ்ரிவால்:
இந்நிலையில், ராம்லீலா மைதானத்தில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், "டெல்லிதான் முதலில் தாக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களுக்கும் இதே போன்ற அவசரச் சட்டம் கொண்டு வரப்படும். மத்திய அரசின் அவசர சட்டம் நகர மக்களை அவமதிக்கும் வகையில் உள்ளது. டெல்லியில் ஜனநாயகம் இருக்காது என்று அவசரச் சட்டம் கூறுகிறது.
டெல்லியில் சர்வாதிகாரம்தான் இருக்கும். துணை நிலை ஆளுநருக்குதான் உச்சபட்ச அதிகாரம். மக்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம். ஆனால், டெல்லியை மத்திய அரசுதான் இயக்கும். நான் நாடு முழுவதும் பயணம் செய்து வருகிறேன். டெல்லி மக்கள் தனியாக இல்லை என்பதை உறுதி சொல்ல விரும்புகிறேன். 140 கோடி இந்திய மக்களும் அவர்களுடன் இருக்கிறார்கள்" என்றார்.
எதிர்க்கட்சிகள் ஆதரவு:
இந்த விவகாரத்தில் நாட்டின் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆதரவை கோரி வருகிறார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். மக்களவையில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை இருப்பதால், மாநிலங்களவையில் டெல்லி துணை நிலை ஆளுநருக்கு அதிக அதிகாரம் வழங்கும் மசோதாவை கொண்டு வரும்போது, எதிர்க்கட்சிகளின் உதவியோடு அதை தோற்கடிக்க அரவிந்த் கெஜ்ரிவால் திட்டமிட்டு வருகிறார்.
அதற்காக, மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)