தாய் மற்றும் சிசு இறப்பு விகித்தை குறைக்க ஆந்திராவின் குடும்ப மருத்துவர் திட்டம்... பலன்கள் என்னென்ன..?
இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மருத்துவமனைகளில் சுமையைக் குறைக்கும் நோக்கத்தில் பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் குடும்ப மருத்துவர் திட்டம் நாளை மாநிலம் முழுவதும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டம் தற்போது குறிப்பிட்ட பயனாளிகளுக்கு மட்டுமே கொண்டுவரப்படுகிறது.
நிபுணர் குழுவின் பரிந்துரை மற்றும் பல்வேறு அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்களிடம் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில், இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மருத்துவமனைகளில் சுமையைக் குறைக்கும் நோக்கத்தில் பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என சுகாதாரம், மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறையின் முதன்மைச் செயலர் எம்டி கிருஷ்ண பாபு தெரிவித்துள்ளார்.
குடும்ப மருத்துவர் திட்டத்தின் கீழ், மாதம் இருமுறை கிராம சுகாதார நிலையங்களுக்கு மருத்துவ அலுவலர் மற்றும் குழு சென்று கிராம அளவில் தரமான சுகாதார சேவையை வழங்குவதோடு, சிகிச்சை மற்றும் ஆரோக்கிய சேவைகளை வழங்கவும் ஒருங்கிணைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து விரிவாக பேசிய கிருஷ்ண பாபு, "முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிராம அளவில் தரமான சுகாதார சேவையை வழங்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. ஒவ்வொரு 2000 பேருக்கும் ஒரு கிராம சுகாதார மருத்துவமனை (VHC) கிராம அளவில் 24 மணிநேரமும் சேவைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதிதாகக் கட்டப்பட்ட ஒவ்வொரு கிராம சுகாதார மருத்துவமனையிலும் ஒரு ANM (துணை செவிலியர்), ஒரு MLHP (சமூக சுகாதார அலுவலர் அல்லது CHO என மறுபெயரிடப்பட்ட நடுத்தர நிலை சுகாதார வழங்குநர்) மற்றும் ASHAக்கள் (அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார ஆர்வலர்கள்) ஆகியோருடன் அடிப்படை ஆரம்ப சுகாதார சேவை வழங்கப்படும்.
தற்போதுள்ள 6,313 சுகாதார துணை மையங்களைத் தவிர, 3,719 கூடுதல் கிராம சுகாதார மருத்துவமனைகளை மாநில அரசு அனுமதித்துள்ளது" என்றார். மொத்த கிராம சுகாதார மருத்துவமனைகளின் எண்ணிக்கையை 10,032 ஆக உயர்த்தியுள்ளது என சுகாதாரத் துறையின் செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2000 கிராமப்புற மக்களுக்கு ஒரு கிராம சுகாதார மருத்துவமனை என்ற அடிப்படையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பிரசவத்திற்கு முந்தைய, பிரசவத்திற்கு பிந்தைய மற்றும் குடும்பக் கட்டுப்பாடு சேவைகள், நோய் கட்டுப்பாடு திட்டங்கள், தொற்றுநோய் அல்லாத நோய் கண்டறியும் சோதனை, தடுப்புமருந்து வழங்குவது, நோய் கண்டறிதல் (14 சோதனைகள்), மருந்துகள் (67 வகைகள்), யோகா மற்றும் சுகாதார சேவைகள் இங்கு வழங்கப்படும்.
பி.எஸ்சி (நர்சிங்) பட்டதாரிதான் நடுத்தர நிலை சுகாதார வழங்குநராக நியமிக்கப்படுவர். இவர்களின் ஆலோசனையின் பேரில், ஆபத்தான கர்ப்பிணிப் பெண்கள், சமூக சுகாதார மையம் / பகுதி மருத்துவமனைகள் / மாவட்ட மருத்துவமனைகள் அல்லது தேவையான வசதிகள் உள்ள ஆரோக்கியஸ்ரீ (சுகாதார காப்பீட்டு திட்டம்) நெட்வொர்க் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுவார்கள்.
கிராமப்புறங்களில் பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிரசவத்திற்கு பிந்தைய சேவைகளை வழங்குவதன் மூலம் தாய் மற்றும் சிசு இறப்பு விகிதங்களைக் குறைப்பதே இதன் நோக்கமாகும்.