போன் செய்த மோடி...கட்சியிலிருந்து விலகிய 8 மாதங்களில்...பாஜகவில் இணையும் அமரீந்தர் சிங்?
பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக மூன்று முறை பொறுப்பு வகித்த அமரீந்தர், தான் பாஜகவில் சேர போவதில்லை என மறுத்து வந்தார்.
கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய அமரீந்தர் சிங் விரைவில் பாஜகவில் சேர வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெளியாகி உள்ளன.
89 வயதாகும் அமரீந்தர் சிங், முதுகு அறுவை சிகிச்சைக்காக லண்டனில் உள்ளார். அடுத்த வாரம் நாடு திரும்பிய பிறகு அவர் தனது பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியை பாஜகவுடன் இணைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, அமரீந்தர் சிங்குடன் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். கேப்டன் அமரீந்தர் சிங், கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்துள்ளார். கடந்தாண்டு அவர் வகித்த வந்த முதலமைச்சர் பொறுப்பு சரண்ஜித் சிங் சன்னிக்கு வழங்கப்பட்டதையடுத்து, கட்சியிலிருந்து வெளியேறினார்.
அப்போது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அவர் எழுதிய கடிதத்தில், தலைமையால் மூன்று முறை அவமானப்படுத்தப்பட்டேன் என்றும் அதை தன்னால் தாங்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். தன் வாழ்க்கையில் அரசியல் இன்னும் மிஞ்சி இருப்பதாகவும், தனக்கு சூரிய அஸ்தமனம் வந்துவிடவில்லை என்றும் கடிதத்தில் எழுதியிருந்தார்.
பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக மூன்று முறை பொறுப்பு வகித்த அமரீந்தர், தான் பாஜகவில் சேர போவதில்லை என மறுத்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக அதிருப்தியில் இருந்த பல காங்கிரஸ் தலைவர்கள் போல் அல்லாமல் சொந்த கட்சியை தொடங்கினார். ஏப்ரல், மே மாதம் நடைபெற்ற பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டார்.
காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படும் பாட்டியாலா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். மேலும் அவரது டெபாசிட்டையும் இழந்தார்.
தேர்தலுக்குப் பிறகு, அதிருப்தியில் இருந்த மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்துள்ளனர். அவர்களில் பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாகரும் ஒருவர். ஆனால், அமரீந்தர் சிங்கின் மனைவி பிரனீத் கவுர் பாட்டியாலாவின் காங்கிரஸ் எம்.பி.யாகவே தொடர்கிறார்.
முன்னாள் மத்திய அமைச்சர் பிரனீத் கவுர், தனது மகள் ஜெய் இந்தர் கவுரை தனது மக்களவைத் தொகுதியில் போட்டியிட வைக்க வேண்டும் என்று பாஜகவிடம் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்