`பாபர் மசூதியை இழந்துவிட்டோம்.. மற்றொரு மசூதியை இழக்க மாட்டோம்!’ - கியான்வாபி விவகாரம் பற்றி ஒவைசி கருத்து!
கியான்வாபி மசூதி விவகாரம் பற்றி பேசியுள்ள அய்மிம் கட்சித் தலைவர் அசாதுத்தீன் ஒவைசி முஸ்லிம்கள் ஏற்கனவே பாபர் மசூதியை இழந்திருப்பதாகவும் மற்றொரு மசூதியை இழக்க மாட்டார்கள் எனவும் கூறியுள்ளார்.
வரும் மே 17ஆம் தேதிக்குள் கியான்வாபி மசூதி பற்றிய முழு வீடியோ சர்வே எடுக்க வேண்டும் என்று வாரணாசி நீதிமன்றம் ஆணையிட்டுள்ள நிலையில், அய்மிம் கட்சித் தலைவர் அசாதுத்தீன் ஒவைசி முஸ்லிம்கள் ஏற்கனவே பாபர் மசூதியை இழந்திருப்பதாகவும் மற்றொரு மசூதியை இழக்க மாட்டார்கள் எனவும் கூறியுள்ளார். மேலும், அவர் பாபர் மசூதி தொடர்பான நீதிமன்றத்தின் முடிவு ஏற்கனவே வந்திருப்பதாகவும், தற்போது கியான்வாபி விவகாரம் தொடங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத் தலைநகர் அகமதாபாத்தில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய அசாதுத்தீன் ஒவைசி, `நான் அரசிடம் கூறுகிறேன்.. நாங்கள் ஒரு பாபர் மசூதியை இழந்திருக்கிறோம்.. மற்றொரு மசூதியை இழக்கவே மாட்டோம்’ எனக் கூறியுள்ளார்.
கடந்த மே 12 அன்று, வாரணாசி நீதிமன்றம் சார்பில் வரும் மே 17ஆம் தேதிக்குள் கியான்வாபி மசூதி பற்றிய சர்வே, அறிக்கை ஆகியவை முழுவதுமாக மேற்கொள்ளப்பட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கியான்வாபி மசூதி வளாகத்தில் உள்ள ஷ்ரிங்கர் கௌரி கோயிலில் பூஜை செய்ய அனுமதி கோரிய தொடுக்கப்பட்ட மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோயில் நிலத்தில் மசூதி கட்டப்பட்டிருப்பதாகவும், பூஜை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் இந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று சுமார் 4 மணி நேரங்களாக சர்வே எடுக்கப்பட்டதுடன், மே 15 அன்றும் சர்வே தொடரும் எனக் கூறப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 1500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
கடந்த 1991ஆம் ஆண்டு, வழிபாட்டுத் தலங்களின் இயல்பை அரசு மாற்றுவதைத் தடை செய்வதாக உருவாக்கப்பட்ட சட்டத்தை அரசு முன்வைக்க வேண்டும் எனக் கூறும் அசாதுத்தீன் ஒவைசி, வாரணாசி நீதிமன்றத்தின் இந்த முடிவைக் கடுமையாக கண்டித்துள்ளார். மேலும், கியான்வாபி மசூதி தொடர்பான வீடியோ சர்வே எடுக்கும் முடிவை காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி ஆகிய எதிர்க்கட்சிகளின் மௌனத்தையும் ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.
எனினும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கடந்த 1991ஆம் ஆண்டு அனைத்து வழிபாட்டுத் தலங்களும் அவற்றின் நிலையில் அப்படியே இருப்பதற்காக அமல்படுத்தப்பட்ட சட்டத்தைக் குறிப்பிட்டு, எந்த வழிபாட்டுத் தலத்தையும் மாற்ற முயலக் கூடாது எனவும், அது மிகப்பெரிய பிரச்னையை உருவாக்கும் எனவும் கூறியுள்ளார்.
`பி.வி.நரசிம்ம ராவ் அரசு அமல்படுத்திய வழிபாட்டுத் தலங்கள் சட்டம், ராம ஜன்மபூமிக்கு மட்டும் பொருந்தாது. ஏற்கனவே இருக்கும் நிலையில், அனைத்து வழிபாட்டுத் தலங்களும் இயங்க வேண்டும். இதனை மாற்ற முயற்சி செய்தால் அது பெரிய பிரச்னையாக மாறும்’ என ப.சிதம்பரம் கூறியுள்ளார்.