Tomato Farmer: விண்ணை முட்டும் தக்காளி விலை.. ஒரே மாதத்தில் கோடீஸ்வரரான விவசாயி.. எப்படி தெரியுமா?
புனே மாவட்டத்தில் விவசாயி ஒருவர் தக்காளி விவசாயம் செய்து 1.5 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயி ஒருவர் தக்காளியை விற்று ஒரே மாதத்தில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.
உச்சத்தில் தக்காளி விலை:
தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் 8-ஆம் தேதி கேரளா மாநிலத்தில் தொடங்கியது. தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி 100 முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒரு கிலோ தக்காளி 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கோடீஸ்வரரான புனே விவசாயி:
இந்நிலையில் புனேவை சேர்ந்தவர் துக்காராம் பாகோஜி கயாகர். அவருக்கு சொந்தமாக 18 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் சுமார் 12 ஏக்கரில் தக்காளி விவசாயம் செய்து வருகிறார். துக்காராம் உடன் அவரது மகன் ஈஸ்வர் கயாகர், மருமகள் சோனாலி ஆகியோர் உடன் இருந்து விவசாயம் செய்து வருகிறார்கள். தக்காளி விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்துள்ள நிலையில் அவருக்கு ஜாக்பாட் அடித்தது. துக்காராம கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 13 ஆயிரம் பெட்டி தக்காளி அறுவடை செய்து விற்பனை செய்துள்ளார். ஒரு தக்காளி பெட்டி சுமார் 1000 முதல் 2400 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். இதன் மூலம் கடந்த மாதம் மட்டும் அவருக்கு 1.5 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
துக்காராம் பாகோஜி கயாகரில் மருமகள் தக்காளியை பயிரிடுவது, அறுவடை செய்வது, பெட்டிகளில் வைப்பது போன்ற பணிகளை கவனித்து வருகிறார். அவரது மகன் ஈஸ்வர் அதனை சந்தை படுத்துதல் மற்றும் விற்பனை தொடர்பான பணிகளை கவனித்து வருகிறார். இது தாங்கள் செலுத்திய கடின உழைப்புக்கு கிடைத்த பலன் இது என தெரிவித்துள்ளனர்.
நேற்று ஒரே நாளில் ஒரு பெட்டி தக்காளி 2,100 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். இதேபோல் 900 தக்காளி பெட்டிகளை விற்பனை செய்து 18 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார். துக்காராம் மட்டுமல்லாமல் அப்பகுதியில் வசிக்கும் பல விவசாயிகளுக்கு தக்காளி விவசாயத்தின் மூலம் நல்ல லாபம் கிடைத்துள்ளது. இதே போல் கர்நாடக மாநிலத்தில் ஒரு விவசாயி 2 ஆயிரம் கிலோ தக்காளி விற்பனை செய்து 38 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரெகுலேட்டர் சேதத்தால் மோசமடைந்த வெள்ள நிலைமை… ராணுவம், என்டிஆர்எஃப் உதவியை நாடிய கெஜ்ரிவால்!