Independence Day 2022: மயிலாடுதுறையில் மும்மதத்தினர் ஏற்றிய மூவர்ணக் கொடி!
மயிலாடுதுறை மாவட்டத்தில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின கொண்டாட்ட விழா நிகழ்வுகளின் தொகுப்பு.
நாடு முழுவதும் இன்று 76 ஆவது சுதந்திர தின விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுதந்திர தின கொண்டாட்டம் கலை கட்டியுள்ளது. முன்னதாக மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் லலிதா தேசிய கொடியை ஏற்றி வைத்து நற்சான்றிதழ் மற்றும் நலத்திட்டங்களை வழங்கினார்.
நாட்டின் 76வது சுதந்திரதின பவளவிழாவை முன்னிட்டு மயிலாடுதுறை இந்திய விளையாட்டு ஆணையம் சாய் விளையாட்டு மைதானத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷா முன்னிலையில் துப்பாக்கி ஏந்திய காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சியர் லலிதா ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 93 அரசு அலுவலர்களுக்கு விருதுகள் மற்றும் நற்சான்றிதழ்களை வழங்கினார். இதனை அடுத்து 51 பயனாளிகளுக்கு தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். பின்னர் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
மும்மதத்தினர் ஏற்றிய மூவர்ணக் கொடி!
மயிலாடுதுறை அருகே நீடூர் கிராமத்தில் இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமுதாயத்தினர் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். நாட்டின் 76ஆவது சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு இன்று இந்து முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதத்தின் பிரதிநிதிகள் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர். கிராம நாட்டான்மைகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் அருள்ராஜ் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் செல்வராஜ், சபீர் அகமது மற்றும் சாலமன் ஆகிய மூவரும் இணைந்து மூவர்ண கொடியை ஏற்றி வைத்தனர். இந்த சுதந்திர தின நன்னாளில் மத வேற்றுமைகளை மறந்து அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் தேசியக் கொடியை ஏற்றிய நிகழ்வு அனைவரின் பாராட்டுதல்களை பெற்றது.
தேசத் தலைவர்கள் வேடமணிந்து நாட்டுப்புற கலைஞர்கள் நடத்திய சுதந்திர தின ஊர்வலம்.
இந்திய திருநாட்டின் சுதந்திரத் திருவிழா அமுதப் பெருவிழாவான இன்று மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் நாட்டுப்புற இசை கலைஞர்கள் சங்கம் சார்பில் தேச விடுதலைக்காக பாடுபட்ட அண்ணல் காந்தியடிகள், கர்மவீரர் காமராஜ் கொடிகாத்த குமரன் சுப்ரமணிய சிவா, கண்ணியமிக்க காயிதே மில்லத் போன்றவர்கள் போல வேடமிட்டு ஊர்வலம் நடைபெற்றது. மயிலாடுதுறை பொது தொழிலாளர் சங்கத்துடன் இணைந்து நடத்திய இந்த பேரணி நகராட்சி பூங்காவில் இருந்து துவங்கியது. நையாண்டி மேளத்துடன் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற பேரணி பொதுத்தொழிலாளர் சங்க அலுவலகத்தில் நிறைவடைந்தது. சாலையில் செல்போர்கள் தேசத்தலைவர்களுக்கு வணக்கம் தெரிவித்து சுதந்திர தின விழா வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து கல்வி நிலையங்களிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டு மாணவர்கள் உற்சாகம்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சுதந்திர பவள விழா ஆண்டையொட்டி அனைத்து கல்வி நிலையங்களிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டன. செம்பனார்கோயிலை அடுத்த காளகஸ்திநாதபுரத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் பள்ளித்தாளாளர் என்.எஸ்.குடியரசு தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் பட்டேல், பகத்சிங், மா.பொ.சி, பாரதியார், வேலு நாச்சியார் உள்ளிட்ட தேச தலைவர்களின் வேடமடைந்த மாணவர்களின் அணிவகுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் இன்று காலை தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.
சட்டமன்ற அலுவலகங்கள் அரசுத்துறை அலுவலகம் பள்ளிக் கல்வி நிலையங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை.
நாட்டின் 75 ஆவது சுதந்திர தின பவளவிழாவை அடுத்து மயிலாடுதுறை பல்வேறு அரசு அலுவலகங்கள் பள்ளி கல்லூரிகள் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சுதந்திரக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை சட்டமன்ற அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்து இனிப்புகள் வழங்கினார். மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி தலைவர் செல்வராஜ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து தேசியக் கொடியேற்றினார். சுதந்திர தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மாயவரம் கூட்டுறவு நகர வங்கியில் அதன் தலைவர் வி.ஜி.கே. செந்தில்நாதன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதேபோல் பாஜக மாவட்ட ஓபிசி அணி சார்பில் அலுவலகத்தில் தூய்மை பணியாளர் காளிதாஸ் தேசியக்கொடியை ஏற்றினார்.
இதில் பங்கேற்ற பாரதமாதா வேடம் அணிந்த குழந்தை பார்வையாளர்களை கவர்ந்தது. முன்னதாக பாஜக ஓபிசி அணியினர் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் மாணவர்கள் முன்னிலையில் கொடியேற்றினார். அங்கு மகாத்மா காந்தியடிகளின் தண்டி யாத்திரை, உப்பு சத்தியாகிரக போராட்டம் டாக்டர் அம்பேத்கர் கர்மவீரர் காமராஜர் போன்ற பல்வேறு தியாக தலைவர்களின் புகைப்பட கண்காட்சிகள் மாணவர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இதேபோன்று மயிலாடுதுறை அடுத்த மணல்மேடு விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளி சார்பில் சுமார் 75 மீட்டர் மெகா தேசிய கொடியினை பேரணியாக எடுத்து சென்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்