Judges Caste: உயர் நீதிமன்ற நீதிபதிகளில் 75% பேர் உயர் சாதியைச் சேர்ந்தவர்கள்: மத்திய அரசு அதிர்ச்சித் தகவல்!
இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டாலும், பட்டியலின, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
சமூக அளவிலும் கல்வி ரீதியாகவும் பின்தங்கிய மக்களை முன்னேற்றும் வகையில் இடஒதுக்கீடு அறிமுகம் செய்யப்பட்டது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஒடுக்கப்பட்டு வரும் மக்களுக்கு, கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை வழங்கும் வகையில் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை:
இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டாலும், பட்டியலின, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு கொள்கை அமலில் இருந்தாலும், ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் குறைவான எண்ணிக்கையிலேயே அங்கு உள்ளனர்.
அதேபோல மத்திய அமைச்சரவையிலும் மாநில அமைச்சரவைகளிலும் உயர் வகுப்பை சேர்ந்தவர்களுக்கே சக்தி வாய்ந்த அமைச்சகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. உள்துறை, வெளிவிவகாரங்கள் துறை, நிதித்துறை, பாதுகாப்புத்துறை, வர்த்தகம் மற்றும் தொழில்துறை, தகவல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை உயர் வகுப்பை சேர்ந்தவர்களுக்கே வழங்கப்படுகின்றன.
உயர் நீதிமன்ற நீதிபதிகளில் 75% உயர் சாதியை சேர்ந்தவர்கள்:
இடஒதுக்கீடு அமலில் இருக்கும் துறைகளே இப்படி என்றால், இடஒதுக்கீடு அமலில் இல்லாத துறையின் நிலை என்னவாக இருக்கும்?
அந்த வகையில், உயர் நீதிமன்றங்களில் நியமிக்கப்படும் நீதிபதிகளில் 75 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் உயர் வகுப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு முதல் பல்வேறு உயர் நீதிமன்றங்களுக்கு நியமிக்கப்பட்ட 604 நீதிபதிகளில் 454 நீதிபதிகள் உயர் வகுப்பை சேர்ந்தவர்கள் என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு முதல் நியமிக்கப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதிகளில் 79 சதவிகிதத்தினர் உயர் சாதியைச் சேர்ந்தவர்களா? என மக்களவை உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி எழுப்பிய கேள்விக்கு, மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
"கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்படும் நபர்களை மட்டுமே நீதிபதிகளாக அரசு நியமிக்கிறது"
அந்த பதிலில், "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 124, 217 மற்றும் 224 ஆகிய பிரிவுகளின் கீழ்தான் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்படுகிறார்கள். நீதிபதிகள் நியமனங்களில் ஒருவரின் சாதியின் அடிப்படையிலோ வகுப்பின் அடிப்படையிலோ இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை.
இருப்பினும், பட்டியலினத்தவர் (எஸ்சி), பழங்குடியினர் (எஸ்டி), இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி), சிறுபான்மையினர், பெண்கள் ஆகியோரில் தகுதியான வேட்பாளர்களைக் கருத்தில் கொண்டு சமூகப் பன்முகத்தன்மையை உறுதி செய்யுமாறு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளை அரசாங்கம் கேட்டுக் கொண்டது.
வழங்கப்பட்ட தகவலின்படி, 2018ஆம் ஆண்டு முதல் இந்தாண்டு ஜூலை 17ஆம் தேதி வரையில் நியமிக்கப்பட்ட 604 உயர் நீதிமன்ற நீதிபதிகளில் 458 நீதிபதிகள் உயர் வகுப்பை சேர்ந்தவர்கள். 18 நீதிபதிகள் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்கள், ஒன்பது பேர் பழங்குடி பிரிவைச் சேர்ந்தவர்கள், 72 பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவைச் சேர்ந்தவர்கள், 34 பேர் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்தவர்கள், மீதமுள்ள 13 நீதிபதிகள், தங்களின் சமூக பின்புலம் பற்றிய தகவலை தெரிவிக்கவில்லை. உச்ச நீதிமன்ற கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்படும் நபர்களை மட்டுமே உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக அரசு நியமிக்கிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.