பயங்கரம்! பெண் போலீசை சரமாரியாக வெட்டிக் கொன்ற கணவன் - தடுக்க வந்த மாமனாருக்கும் வெட்டு
கேரளாவில் பெண் போலீசை அவரது கணவரே சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் அமைந்துள்ளது காசர்கோடு மாவட்டம். இங்கு அமைந்துள்ளது சந்தேரா பகுதி. இங்கு வசித்து வருபவர் ராஜேஷ். இவருக்கு வயது 38. இவர் ஓட்டுநராக உள்ளார். இவரது மனைவி திவ்யஸ்ரீ. இவருக்கு வயது 34. இவர் சந்தேரா காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 12 வயதில் ஆஷிஷ் என்ற மகன் உள்ளார்.
பெண் போலீஸ்:
கணவன் மனைவி இருவருக்கும் சமீபகாலமாகவே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், திவ்யஸ்ரீ தனது கணவரிடம் கோபித்துக் கொண்டு கருவெள்ளூர் பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். மனைவியை தன்னிடம் வந்து சேர்ந்து வாழுமாறு தொடர்ந்து ராஜேஷ் வலியுறுத்தி வந்துள்ளார். இதன் காரணமாகவே இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று தனது மாமனார் வீட்டிற்கு ராஜேஷ் சென்றுள்ளார். அப்போது, திவ்யஸ்ரீயிடம் பேசும்போது ராஜேஷிற்கும், அவருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மனைவி மீது ஆத்திரத்தில் இருந்த கணவன் ராஜேஷ் ஏற்கனவே அரிவாளை மறைத்து கொண்டு சென்று கொண்டிருந்தார்.
வெட்டிக் கொன்ற கணவன்:
இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே, மனைவி என்றும் பாராமல் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக திவ்யஸ்ரீயை வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் திவ்யஸ்ரீ வீட்டிலே சரிந்தார். அப்போது, வீட்டில் இருந்த திவ்யஸ்ரீயின் தந்தை வாசு தடுக்க முயற்சித்தார். ஆனால், அவரையும் ராஜேஷ் அரிவாளால் வெட்டினார்.
மனைவியை சரமாரியாக ராஜேஷ் அங்கிருந்து தப்பி ஓடினார். இவர்களது சண்டை சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது திவ்யஸ்ரீ ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவர்கள் உடனடியாக திவ்யஸ்ரீயை மீட்டு அருகில் இருந்த கண்ணூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
தப்பியோடிய ராஜேஷை சந்தேரா காவல்நிலைய போலீசார் கைது செய்தனர். அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மனைவி என்றும் பாராமல் பெண் போலீசை கணவனே சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.