MadhyaPradesh: தண்ணீர் கலந்த பாலை குடித்த 5 மாத குழந்தை துடிதுடித்துப் பலி!
மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் தான் இந்த கோர சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்கு அசுத்தமான குடிநீரைப் பருகிய 9 பேர் பலியான நிலையில் அதில் 5 மாத குழந்தை ஒன்றும் உயிரைப் பறிகொடுத்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் அசுத்தமான தண்ணீர் கலந்த பாலை பருகிய 5 மாத குழந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் தான் இந்த கோர சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்கு அசுத்தமான குடிநீரைப் பருகிய 9 பேர் பலியான நிலையில் அதில் 5 மாத குழந்தை ஒன்றும் உயிரைப் பறிகொடுத்துள்ளது. இந்தூர் மாவட்டத்தில் பாகீரத்புரா பகுதியில் நர்மதை ஆறு ஓடுகிறது. இந்த ஆறு தற்போது அசுத்தங்கள் நிறைந்து காணப்படுகிறது. ஆற்றை சுத்தப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடையே எழுந்துள்ள நிலையில் தற்போது அது உயிரிழப்பு வரை சென்றுள்ளது.
இந்த சம்பவத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் அப்பகுதியைச் சார்ந்த மக்கள் உயிர் பயத்தில் மருத்துவமனைக்கு படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர். இதுதொடர்பான விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அப்பகுதியைச் சேர்ந்த காவல் நிலையத்தின் கழிவறை இணைப்பு ஒன்று தவறுதலாக குடிநீர் குழாயுடன் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
5 மாத குழந்தை பரிதாப மரணம்
இந்த நிலையில் அசுத்தமான நீரால் பாதிக்கப்பட்ட பகுதியில் சுனில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 5 மாத ஆண் குழந்தை உள்ளது. அவ்யான் என்ற அந்த குழந்தைக்கு பெயரிடப்பட்டு மகிழ்ச்சியோடு வளர்த்து வந்தனர். அதற்கு மிக முக்கியமான காரணம் 10 ஆண்டுகள் கழித்து இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்திருந்தது. சுனில் அங்குள்ள கூரியர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.
இப்படியான நிலையில் சம்பவம் நடப்பதற்கு சில நாட்கள் முன்பு அவ்யானுக்கு காய்ச்சல் ஏற்பட அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சையளித்துள்ளனர். அந்நேரம் பார்க்க சுனிலின் மனைவிக்கு தாய்ப்பால் சுரக்கவில்லை. அதனால் மருத்துவர் அறிவுரையின்படி பாக்கெட் பாலில் தண்ணீர் கலந்து கொடுத்துள்ளனர். அதற்காக நர்மதை ஆற்று நீரை பயன்படுத்தியுள்ளனர்.
ஆனால் அந்த தண்ணீர் இவ்வளவு அசுத்தமாக இருப்பதாக யாரும் தங்களுக்கு தெரிவிக்கவில்லை என சுனில் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். பாக்கெட் பாலை குடித்த பிறகு குழந்தைக்கு காய்ச்சலும், பேதியும் அதிகமாகியது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை மரணமடைந்தது.
குழந்தை மரணிப்பான் என தாங்கள் கனவிலும் கூட நினைக்கவில்லை என சுனிலின் குடும்பம் கலங்கி நிற்கிறது. அப்பகுதி மக்கள் அனைவரும் அந்த நீரை தான் பருகி வருகின்றனர். முன்னெச்சரிக்கையாக நாங்கள் தண்ணீரை சூடுபடுத்தி குடித்தாலும் அதன் அசுத்தம், பின்விளைவுகள் பற்றி எந்த அறிவிப்பும் வழங்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.





















