Kerala Blast: கேரளாவை உலுக்கிய குண்டு வெடிப்பு - பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு: அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது..!
கேரளாவில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளதால் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.
கேரளாவில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளதால் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. இதனிடையே முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது.
கேரள மாநிலம் கொச்சி நகரில் உள்ள களமச்சேரியில் ஜம்ரா சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையம் உள்ளது. இங்கு யெகோவா சாட்சிகள் என்ற கிறிஸ்தவ மதப்பிரிவினர் 3 தினங்களாக பிரார்த்தனை கூட்டம் நடத்தி வந்தனர். இதில் சுமார் 2000 மக்கள் கலந்து கொண்ட நிலையில் நிறைவு நாளான நேற்று ஜெபக்கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்வதவர்களின் புனிதநாள் என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, காலை 9.30 மணியளவில் திடீரன 3க்கும் மேற்பட்ட குண்டுகள் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அங்கு கூடியிருந்த மக்கள் சிதறி ஓடினர். அந்த இடமே புகைமூட்டத்துடன் ஆங்காங்கே தீ எரிந்தபடி காட்சியளித்தது. உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர் துரிதமாக செயல்பட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த குண்டு வெடிப்பு விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கிட்டதட்ட 36 பேர் படுகாயங்களுடன் எர்ணாகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பில் காயம் அடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால் உடனடியாக விடுப்பில் உள்ள மருத்துவர்கள் பணிக்கு திரும்ப மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்ட நிலையில், அனைவரும் பணிக்கு திரும்பினர். சம்பவம் நடந்த இடத்தை போலீஸ் அதிகாரிகள், அமைச்சர்கள் என அனைவரும் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையின்படி, வெடிபொருட்கள் டிபன் பாக்ஸில் வைக்கப்பட்டிருந்ததாக சொல்லப்பட்டது.
இதனிடையே தமிழக - கேரள எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தம்மனத்தைச் சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவர் நான் தான் குண்டு வெடிப்புக்கு காரணம் என பேஸ்புக் லைவில் வீடியோ வெளியிட்டு விட்டு திருச்சூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கொடக்காரா காவல்துறையில் சரணடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தான் சம்பந்தப்பட்ட திருச்சபையில் பிரதிநிதியாக இருந்ததாகவும், வெறுப்பை வளர்க்கும் விதமாக இருந்த சபையின் பேச்சை கண்டித்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் எதுவும் மாறாததால் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து டொமினிக் மார்ட்டின் வீட்டில் சோதனை செய்ததில் வெடிபொருட்கள் செய்ய பயன்படுத்தப்பட பொருட்கள், ரிமோட் ஆகியவற்றை காவல்துறையினர் கண்டுபித்து கைப்பற்றியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பு விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். இதற்கிடையில் இன்று கேரளாவில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்த நிலையில் அக்கூட்டம் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.