Shocking : 24 மணிநேரம்.. 18 பேர் உயிரிழப்பு.. மகாராஷ்டிரா மருத்துவமனையில் அதிர்ச்சி.. நடந்தது என்ன?
மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் மருத்துமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![Shocking : 24 மணிநேரம்.. 18 பேர் உயிரிழப்பு.. மகாராஷ்டிரா மருத்துவமனையில் அதிர்ச்சி.. நடந்தது என்ன? 18 Deaths reported In 24 Hours In Maharashtra Hospital Probe Panel Formed Shocking : 24 மணிநேரம்.. 18 பேர் உயிரிழப்பு.. மகாராஷ்டிரா மருத்துவமனையில் அதிர்ச்சி.. நடந்தது என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/13/514c00e9a60565db5a3844ffd737174b1691929055472729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மருத்துவமனை நிர்வாகம், மருத்துவர்களின் அலட்சியம் காரணமாக நோயாளிகள் உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது. இம்மாதிரியான சம்பவங்களை தவிர்க்க வேண்டும் என தொடர் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
மகாராஷ்டிர மருத்துவனையில் அதிர்ச்சி:
இந்த நிலையில், மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் மருத்துமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம், தானேயில் கல்வா பகுதியில் அமைந்துள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் மருத்துவமனையில் நடந்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் அபிஜித் பங்கர் கூறுகையில், "இறந்தவர்களில் 10 பெண்கள் மற்றும் எட்டு ஆண்கள் அடங்குவர். அவர்களில் ஆறு பேர் தானே நகரைச் சேர்ந்தவர்கள். நான்கு பேர் கல்யாண், 3 பேர் சஹாபூரைச் சேர்ந்தவர்கள். பிவாண்டி, உல்ஹாஸ்நகர் மற்றும் கோவண்டியை சேர்ந்த தலா ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் வேறு இடத்தை சேர்ந்தவர். ஒருவரின் அடையாளத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. இறந்தவர்களில் 12 பேர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்" என்றார்.
24 மணி நேரத்தில் 18 பேர் உயிரிழப்பு:
செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து விரிவாக பேசுகையில், "மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, நிலைமை குறித்து கேட்டறிந்தார். சுகாதாரப் பணிகள் ஆணையர் தலைமையில், ஆட்சியர், மாநகாட்சி தலைவர், சுகாதாரப் பணிகள் இயக்குநர், அறுவை சிகிச்சை நிபுணர் ஆகியோர் அடங்கிய விசாரணைக் குழுவை அமைக்க உத்தரவிட்டார்.
உயிரிழப்பின் காரணம் குறித்து ஆய்வு செய்ய இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நோயாளிகளுக்கு சிறுநீரக கல், நாள்பட்ட பக்கவாதம், அல்சர், நிமோனியா போன்ற சிக்கல்கள் இருந்திருக்கின்றன. மண்ணெண்ணெயை குடித்த ஒருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
என்ன சிகிச்சை கொடுக்கப்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு, இறந்தவர்களின் உறவினர்கள் வாக்குமூலம் போன்றவை பதிவு செய்யப்படும். மருத்துவர்களின் அலட்சியம் காரணமாக உயிரிழப்பு நிகழ்ந்ததாக சிலர் குற்றச்சாட்டு சுமத்துகிறார்கள். இது தீவிரமான பிரச்னை. இதுகுறித்து விசாரணைக் குழு விசாரிக்கும்.
காரணம் என்ன?
கொரோனா மருத்துவமனை பணியாளர்கள் 500 பேர் கொண்ட குழு, இந்த மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். கூடுதல் செவிலியர் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் இயங்கக் கூடிய பிரேத பரிசோதனை வசதியை ஏற்படுத்துவது எங்கள் இலக்கு" என்றார்.
முன்னதாக, இதுகுறித்து மகாராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சர் தானாஜி சாவந்த் கூறுகையில், "இரண்டு நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மருத்துவமனையின் டீன் கேட்டுக் கொள்ளப்பட்டார்" என்றார்.
இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் கணேஷ் கவ்டே, "கடந்த 24 மணி நேரத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஒரு நாளைக்கு வழக்கமாக ஆறு முதல் ஏழு பேர் உயிரிழப்பார்கள் என எங்களிடம் மருத்துவனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சில நோயாளிகள் ஆபத்தான நிலையில் இங்கு வந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் எங்களிடம் கூறியது. சிலர் வயதானவர்கள். இந்த அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் காரணமாக அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில் மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது" என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)