(Source: ECI/ABP News/ABP Majha)
Gold Price Today: நாளுக்கு நாள் உயர்வு! தொடர்ந்து உச்சத்தில் விற்பனையாகும் தங்கம் - இன்று விலை என்ன?
சென்னையில் இன்று ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூபாய் 400 உயர்ந்து தொடர்ந்து உச்சத்தில் விற்பனையாகி வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. மத்திய அரசு தனது நிதிநிலை அறிக்கையில் தங்கம் மீதான இறக்குமதி வரியை 6 சதவீதம் குறைத்தது. இதையடுத்து, தங்கத்தின் விலை 4 நாட்கள் குறைந்தது. மீண்டும் தற்போது தங்கம் விலை உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கிறது.
நாளுக்கு நாள் உயரும் தங்கம் விலை:
சென்னையில் நேற்று 22 காரட் கிராமிற்கு ரூபாய் 6 ஆயிரத்து 660க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று ரூபாய் 50 அதிகரித்து ரூபாய் 6 ஆயிரத்து 710க்கு விற்பனையாகிறது. இதனால், தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 400 அதிகரித்துள்ளது. நேற்று சவரனுக்கு ரூபாய் 53 ஆயிரத்து 280க்கு விற்பனையாகிய தங்கம் இன்று சவரனுக்கு ரூபாய் 53 ஆயிரத்து 680க்கு விற்பனையாகிறது.
24 காரட் தங்கம் கிராமிற்கு ரூபாய் 7 ஆயிரத்து 165க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூபாய் 57 ஆயிரத்து 320க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை எந்த மாற்றமுமின்றி கிராமிற்கு ரூபாய் 92 ஆக விற்பனையாகிறது. ஒரு கிலோ வௌ்ளி ரூபாய் 92 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது.
சாமானியர்கள் அவதி:
தங்கம் விலை தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வது மக்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ரூபாய் 54 ஆயிரத்தை நெருங்கும் சவரன் தங்கம் விலையால் சாமானியர்கள் அதிர்ச்சியல் உறைந்துள்ளனர். இதனால், திருமணத்திற்கு நகை வாங்குபவர்கள் உள்ளிட்ட பலரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும், தங்கம் விலையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.