விதிகளை மீறினால் விமானத்திலிருந்து வெளியேற்றப்படலாம்... டிஜிசிஏ புதிய உத்தரவு
பயணத்தின் அனைத்து கட்டங்களிலும் விமான பயணிகள் முகக்கவசம் அணிந்திருப்பதை விமான சேவை நிறுவனம் மற்றும் விமான நிலையம் உறுதிப்படுத்த வேண்டும்.
கொரோனா பெருந்தொற்று கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களின் வாழ்க்கையையே புரட்டி போட்டுள்ளது. இதை அனைவரும் அறிவர். 2020 மார்ச் மாதம் பரவ தொடங்கிய மூன்று மாதங்களில் உச்சம் தொட்டு செப்டம்பர் மாதம் குறைய தொடங்கியது. சற்று நிம்மதி பெருமூச்சு விடுகையில், 2021ஆம் ஆண்டு ஏப்ரம் மீண்டும் பரவ தொடங்கிய மே மாதம் உச்சம் தொட்டது.
முதல் அலையை காட்டிலும், இரண்டாவது அலை மோசமான உயிரிழப்பு சம்பவங்களை ஏற்படுத்தியது. மக்கள் கொத்து கொத்தாக உயரிழந்தனர். இது மீண்டும் குறைய தொடங்கி ஒமைக்ரான் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இப்படி தொடர்ச்சியாக, அடுத்த அடுத்த அலை உருவாகி மக்களை பதற்றத்தில் தள்ளியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துவருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 195 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 927 லிருந்து1,021 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34.55 லட்சத்து-க்கு மேல் அதிகரித்துள்ளது.
இச்சூழலில், விமானங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பயணத்தின் அனைத்து கட்டங்களிலும் விமான பயணிகள் முகக்கவசம் அணிந்திருப்பதை விமான சேவை நிறுவனம் மற்றும் விமான நிலையம் உறுதிப்படுத்த வேண்டும் என விமான போக்குவரத்துத்துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விதியை மீறுபவர்களை விமானத்திலிருந்து வெளியேற்றலாம் அல்லது மூன்று மாதங்கள் வரை அவர்களை விமானத்தில் பயணம் செய்வதற்கு தடை விதிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விமான போக்குவரத்துத்துறை இயக்குநரகத்தின் இயக்குநர் பேசுகையில், "விமான நிலையத்தில் சோதனை மேற்கொள்ளப்படும். விமான பயணிகள் முகக்கவசம் அணிந்திருப்பதை விமான சேவை நிறுவனம் உறுதி செய்ய வேண்டும். பயணத்தின் அனைத்து கட்டங்களிலும் முகக்கவசத்தை அணிந்திருக்க வேண்டும். விதிவிலக்கான சூழலில் மட்டும் முகக்கவசத்தை அணியாமல் இருக்கலாம்" என்றார்.
களத்தில் கரோனா விதிகள் தீவிரமாக அமல்படுத்தப்படவில்லை என்றும் விமான பயணிகளுக்கு தனியாக அறிவுரைகள் வழங்க வேண்டும் என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த வாரம் பிறப்பித்த நிலையில், விமான போக்குவரத்துத்துறை இயக்குநரகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்