கொரோனா பாதிப்பு அதிகரிப்பு : மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால், தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் இன்று ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் கடந்தாண்டு கடுமையான பாதிப்பை சந்தித்தது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பாலும், ஊரடங்காலும் மக்கள் கடுமையான நெருக்கடிகளை சந்தித்தனர். பின்னர், கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு ஊரடங்கும் படிப்படியாக தளர்த்தப்பட்டது. இந்த சூழலில், தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, மகாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில் மீண்டும் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி நாளை முதல்-அமைச்சர்களுடன் கொரோனா பாதிப்பு குறித்து முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தை பொறுத்த மட்டில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் மட்டும் 759 ஆக அதிகரித்தது. மேலும், 50 நாட்களுக்கு பிறகு தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்த சூழலில், தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையில் கொரோனா இரண்டாம் அலை, பரவலுக்கு காரணம், தடுப்பூசி, தடுப்பூசிக்கான விழிப்புணர்வு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.