’தமிழகத்தில் அதிமுக தான் சிறந்த எதிர்க்கட்சி; விரைவில் இணைவோம்’ -வி.கே.சசிகலா பரபரப்பு பேட்டி
"நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அனைவரும் நிச்சயமாக இணைவோம். இணைப்பு முயற்சி நன்றாக சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக தான் சிறந்த எதிர் கட்சியாக செயல்படுகிறது” என சசிகலா தெரிவித்தார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு, சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ”கொங்கு மண்டலத்தில் சுற்றுபயணம் மன நிறைவை தந்தது. எனது சுற்றுபயணம் தொடர்ந்து நடைபெறும். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அனைவரும் நிச்சயமாக இணைவோம். இணைப்பு முயற்சி நன்றாக சென்று கொண்டிருக்கிறது. ஜெயலலிதா இருக்கும் போது கட்சி எப்படி இருந்தது? இப்போது அந்த நிலைமை இருக்கிறதா என்பதை உங்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன். அதிமுகவில் அனைவரையும் ஒன்று சேர்ப்பதே எனது பணி. அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் கட்சியில் சேர மன்னிப்பு கடிதம் கொடுத்ததாக தெரியவில்லை” எனத் தெரிவித்தார்.
பாஜக கூட்டணியிலே தொடர்கிறோம் என்ற ஒபிஎஸ் கருத்துக்கு பதலளித்த சசிகலா, “அது அவரது விருப்பம். நிலைப்பாடு. ஒபிஎஸ் என்னை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார். விரைவில் சந்திப்பு நடைபெறும். தமிழக அரசு ஆமை வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. சுதந்திரத்திற்க்கு பிறகு ஒரு முதல்வர் மக்களுக்காக பேசாமல், தனிப்பட்ட நபருக்காக பேசுவது இதுவே முதல்முறை. உங்களிடம் தவறில்லை என்று நிரூபியுங்கள். அதற்கு ஏன் மத்திய அரசை குறை கூறுகிறீர்கள்? தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு என்பதே இல்லை.
குடிகாரர்களுக்கு ஆதவராக அமைச்சர் தானாக பேசவில்லை. அவரை பேச வைத்திருக்கிறார்கள். அமைச்சர் முத்துசாமி நல்ல மனிதர் தான். மக்களுக்கு கெடுதல் இல்லாமல் ஆட்சி நடத்த முடியும். அதை நான் செய்து காட்டுவேன். அரசாங்க ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை. திமுகவிற்கு வாக்களித்ததால் மக்கள் மிகவும் சிரமாக உள்ளனர். அது மாற வேண்டுமென்றால் அது எங்கள் ஆட்சி வந்தால் மட்டுமே முடியும். தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக தான் சிறந்த எதிர் கட்சியாக செயல்படுகிறது” எனத் தெரிவித்தார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்