'தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களை தந்திரமாக ஏமாற்றுவதா?' - வானதி சீனிவாசன் கண்டனம்
"மிகமிக குறைவான எண்ணிக்கையில் ஓடும் சாதாரண கட்டண பேருந்துகளில் தான் பெண்கள் இலவசமாக பயணிக்கிறார்கள். அதற்கும் வேட்டு வைக்கவே, வெளிப்படையாக அறிவிக்காமல் கணக்கெடுப்பு நடத்தி வருகிறார்கள்".
பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ. 1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் வாக்குறுதி அளித்து திமுக ஆட்சியைப் பிடித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளாக உரிமைத் தொகை வழங்காமல் ஏமாற்றி வந்தது. ஆனால், மக்களவைத் தேர்தல் வருகிறது என்றதும் கடந்த மூன்று மாதங்களாக ரூ. 1,000 வழங்கப்படுகிறது. ஆனால், தேர்தல் வாக்குறுதிப்படி, அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் உரிமைத் தொகை வழங்காமல், 'உரிமை'யை, 'தகுதி'யாக்கி 50 சதவீத குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 1,000 வழங்க திமுக அரசு மறுத்து விட்டது.
இப்படி உரிமைத் தொகை வழங்குவதில் ஏமாற்றிய திமுக அரசு, அடுத்து அரசுப் போக்குவரத்துக்கழக நகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வேலையை தந்திரமாக தொடங்கியுள்ளது. நகர பேருந்துகள் அனைத்திலும் பெண்களுக்கு இலவச பயணம் என, சட்டமன்றத் தேர்தலில் வாக்குறுதி அளித்துவிட்டு, சாதாரண கட்டண பேருந்துகளில் மட்டும் இலவச பயணத்தை அனுமதித்துள்ளது. அதிலும் பெண் பயனாளின் எண்ணிக்கையைக் குறைக்க, இலவச பயணம் செய்யும் பெண்களிடம் மதம், ஜாதி, கல்வித் தகுதி, வேலை உள்ளிட்ட 15 வகையான விவரங்களை திமுக அரசு சேகரித்து வருகிறது.
மிகமிக குறைவான எண்ணிக்கையில் ஓடும் சாதாரண கட்டண பேருந்துகளில் தான் பெண்கள் இலவசமாக பயணிக்கிறார்கள். அதற்கும் வேட்டு வைக்கவே, வெளிப்படையாக அறிவிக்காமல் கணக்கெடுப்பு நடத்தி வருகிறார்கள். இது கடும் கண்டனத்திற்குரியது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களை தந்திரமாக ஏமாற்றி வரும் திமுகவுக்கு வரும் மக்களவைத் தேர்தலில் தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள். திமுக அரசு சட்டமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அனைத்து நகரப் பேருந்துகளிலும் பெண்கள் இலவசப் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும். மக்கள் தொகைக்கு ஏற்ப நகரப் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.