Dikshitar Children Issue: குழந்தைகளின் அந்தரங்க உறுப்புகளை தீட்சிதர் தொட்டது உண்மை; இருவிரல் பரிசோதனைக்கான ஆதாரம் இல்லை - ஆய்வில் அதிர்ச்சி
சிதம்பரத்தில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு இருவிரல் பரிசோதனை நடைபெற்றதற்கான ஆதாரம் இல்லை. ஆனால் குழந்தைகளின் அந்தரங்க உறுப்புகள் தொடப்பட்டது உண்மை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரத்தில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு இருவிரல் பரிசோதனை நடைபெற்றதற்கான ஆதாரம் இல்லை ஆனால் குழந்தைகளின் அந்தரங்க உறுப்புகள் தொடப்பட்டது உண்மை என தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களின் குழந்தைகளிடம் இருவிரல் பரிசோதனை நடைபெற்றதாக தமிழக ஆளுநர் குற்றச்சாட்டை அடுத்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் விசாரணை மேற்கொண்டார். முதலில் தீட்சிதர்களிடம் விசாரணை மேற்கொண்ட அவர், தொடர்ந்து சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினரிடம் விசாரணை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட குழந்தைகளிடமும் விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த ஆனந்த், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியன் கனுக்கோ உத்தரவின் பேரில் இன்று ஆய்வு செய்ய வந்துள்ளதாகவும், தலைமைச் செயலகத்திலிருந்து இந்த பிரச்சினை தொடர்பாக விசாரணை செய்த அறிக்கை தங்களுக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார். அந்த அறிக்கை சரியாக உள்ளதா என்பதை சரி பார்ப்பதற்காக சிதம்பரம் வருகை புரிந்துள்ளதாகவும் இந்த குற்றச்சாட்டு குறித்து மூன்று கட்ட விசாரணைகள் நடைபெற்றதாகவும் கூறினார்.
முதல் கட்டமாக பாதிக்கப்பட்ட தீட்சிதர்களிடம் ஒரு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடைபெற்றதாகவும் இரண்டாம் கட்டமாக காவல்துறை அதிகாரிகளிடமும், மூன்றாம் கட்டமாக பாதிக்கப்பட்ட குழந்தைகளிடமும் விசாரணை நடைபெற்றதாகவும் கூறினார். விசாரணை அனைத்தையும் பதிவு செய்து வைத்துள்ளதாகவும் இந்த அறிக்கை விசாரணை ஆணைய தலைவரிடம் கொடுத்த பிறகு அவர் நடவடிக்கை எடுப்பார் என்றும் கூறினார்.
இந்த அறிக்கையானது இரண்டு மூன்று நாட்களுக்குள் விசாரணை செய்த அனைத்தையும் ஒன்று திரட்டி அதன் பிறகு பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்கப்படும் என தெரிவித்தார். குழந்தை திருமணம் நடைபெற்றது உண்மையா இல்லையா என்ற கேள்விக்கு, குழந்தை திருமணம் நடைபெற்றதற்கு சாட்சிகள் இல்லை எனவும் சம்பந்தப்பட்ட குழந்தைகளிடம் விசாரிக்கும் பொழுது, அவர்கள் தங்களுக்கு குழந்தை திருமணம் நடைபெறவில்லை என தெரிவித்துள்ளதாக கூறினார். மேலும் காவல்துறையினர் வலுக்கட்டாயப்படுத்தியதால் குழந்தை திருமணம் நடைபெற்றதாக ஒப்புக்கொண்டதாக அவர்கள் கூறியதாகவும் தெரிவித்தார்.
இருவிரல் பரிசோதனை நடைபெற்றதற்கான ஆதாரம் இல்லை, ஆனால் குழந்தைகளின் அந்தரங்க உறுப்புகள் தொடப்பட்டது உண்மை என தெரிவித்தார். தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை செய்து அதன் பிறகு அறிக்கை தயார் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ஆனந்த் தெரிவித்தார்.