
தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு தர மறுக்கிறது - திருச்சி சிவா குற்றச்சாட்டு
தமிழகத்திற்கு நியாயமாக தர வேண்டிய நிதியை கூட ஒன்றிய அரசு தர மறுக்கிறார்கள். ஒரு கண்ணுக்கு வெண்ணையும், இன்னொரு பெண்ணுக்கு சுண்ணாம்பும் காட்டக்கூடாது.

கோவை விமான நிலையத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது திருச்சியில் என்.ஐ.டி கல்லூரி வளாகத்தில் மாணவி பாலியல் துன்புறுத்தல் குறித்த கேள்விக்கு, “உலகில் எந்த மூலையிலும் இது போன்ற பாதகம் ஏற்பட்டாலும் அது கண்டிக்கத்தக்கது. அரசுகள் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும். அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்” எனப் பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், “தமிழகத்திற்கு நியாயமாக தர வேண்டிய நிதியை கூட ஒன்றிய அரசு தர மறுக்கிறார்கள். முதல்வர் கடிதம் எழுதினார். எங்களைப் போன்றவர்கள் தனிப்பட்ட முறையில் கோரிக்கை வைக்கிறோம். ஒரு கண்ணுக்கு வெண்ணையும், இன்னொரு பெண்ணுக்கு சுண்ணாம்பும் காட்டக்கூடாது. தமிழகம் சிறப்பாக செயல்படக்கூடிய மாநிலம். பல துறைகளில் முன்னிலை வைக்கிறோம்.
பழனி முருகன் மாநாடு
வட மாநிலங்களுடன் ஒப்பிடும்பொழுது பல வகைகளில் முன்னிலையில் இருக்கிறோம். மாற்று கட்சி என்ற மனநிலையுடன் ஒன்றிய அரசு பார்க்கிறது. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. கொல்கத்தா விவகாரத்தில் ஒன்றிய அரசு அக்கறை கட்டுவதில் தவறில்லை. மணிப்பூரில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் பாலியல் சம்பவங்கள் குறித்து பாஜக கவலைப்படவில்லை. உள்துறை அமைச்சர் இது குறித்து அறிக்கை கூட சமர்ப்பிக்கவில்லை. நாட்டு மக்கள் இந்த ஒன்றிய அரசின் செயல்பாடுகளை பார்த்து எடை போட வேண்டும். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கருத்து, கொள்கை இருக்கும். அரசாங்கத்தை நடத்துபவர்களுக்கு சில கடமைகள் இருக்கும். இந்த வகையில் தான் பழனி முருகன் மாநாட்டை பார்க்க வேண்டும். இந்த பிரச்சனையை பார்க்க வேண்டும்.
நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். இவர்கள் வரலாம், வரக்கூடாது என நினைக்கும் உரிமை யாருக்கும் இல்லை. ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் கட்சி ஆரமிக்கும் உரிமை உண்டு. தமிழக அரசு தன் கடமையை சரியாக செய்கிறது. பல குறியீடுகளில் முதலிடத்தில் இருக்கிறோம். உயர்கல்வி சேர்க்கையில் இந்தியாவில் சராசரியை விட அதிக அளவில் உயரத்தில் இருக்கிறோம். தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசுடன் பிரச்சினை இல்லை. கடமைகளை செய்ய உரிமைகளை எதிர்பார்க்கிறோம். போராடுகிறோம். ஒன்றிய அரசு நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

