'ஆப்ரேஷன் பாகுபலி' - வனத்துறை வியூகங்களை தவிடுபொடியாக்கும் காட்டு யானை!
யானைக்கு மயக்க ஊசி செலுத்தி உள்ளனர். ஆனால் அது யானையின் மீது படாமல் சென்றதில் யானை தப்பித்துள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் ‘பாகுபலி’ என அழைக்கப்படும் ஒரு ஆண் காட்டு யானை உலா வருகிறது. நீண்ட தந்தங்களுடன் பிரமிக்க வைக்கும் உருவத்துடன் இந்த காட்டு யானை இருப்பதால், பாகுபலி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த யானை மற்ற யானை கூட்டத்தோடு சேராமலும் அடர்ந்த வனத்தினுள் செல்லாமலும் மாதக்கணக்கில் குடியிருப்பு பகுதிகளில் தனியே சுற்றித் திரிகிறது. யானைகள் ஒன்றிரண்டு வாரங்களுக்கு மேல் ஓரிடத்தில் தங்காமல் இடம் விட்டு இடம் மாறிவிடும் வழக்கம் கொண்டது. ஆனால் இந்த யானை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஒரே பகுதியில் இருந்து வருகிறது. வனப்பகுதியில் இருந்து வெளியேறி இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த வருகிறது. இந்த யானை தற்போது வரை மனிதர்கள் யாரையும் தாக்கவில்லை என்றாலும், தொடர்ந்து உணவுக்காக விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் யானையை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என விவசாயிகள் வனத்துறையினருக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் பாகுபலி யானையை பிடித்து, ஜி.பி.எஸ் தொழில்நுட்பம் கொண்ட ரேடியோ காலர் பொறுத்தி அதன் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் இருந்து கலீம், மாரியப்பன், வெங்கடேஸ் என்ற 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. இந்த கும்கி யானைகளின் உதவியுடன் மருத்துவ குழுவினர் மற்றும் வனத்துறையினர் இணைந்து பாகுபலி யானைக்கு ரேடியோ காலர் பொருத்துவதற்கான நடவடிக்கையை வனத்துறையினர் நேற்று துவக்கினர். ஆனால் ஒற்றை காட்டு யானை வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகிறது. வனத்துறை அதிகாரிகள், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் மருத்துவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 5 மருத்துவர்கள் தலைமையில் 5 குழுக்களாக யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கு தீவிரமாக பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வனத்துறையினர் வியூகங்களை பாகுபலி யானை தவிடுபொடியாக்கி வருகிறது. யானையைப் பிடிப்பதற்கு பலாப்பழம் மற்றும் யானைகளுக்கு பிடித்த பழங்களை வைத்தும் பிடிக்க திட்டம் வகுத்துள்ளனர். யானையைத் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், இன்று அதிகாலை யானைக்கு மயக்க ஊசி செலுத்தி உள்ளனர். ஆனால் அது யானையின் மீது படாமல் சென்றதில் யானை தப்பித்துள்ளது. பாகுபலி யானை மிகுந்த ஆரோக்கியத்துடனும் நல்ல உணர்வு திறன் இருப்பதால் தங்களுடைய திட்டங்களை புரிந்து கொண்டு வேகமாக நகர்ந்து செல்வதாக வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் இன்று மாலை தண்ணீர் குடிக்க மலை மீது ஏறிய யானை மீண்டும் தண்ணீர் குடிக்க வனப் பகுதிக்கு வரும் போது மயக்க ஊசி செலுத்தி திட்டமிட்டு உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து வனத்துறை மருத்துவர் சுகுமார் கூறுகையில், “மலையின் மீது ஏறி செல்லும் காட்டு யானையை மீண்டும் கீழே இறக்குவதற்கு வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். யானை மலையில் இருந்து கீழே இறங்கிய பின்னரே அதற்கு மயக்க ஊசி செலுத்த தேவையான முயற்சி மேற்கொள்ளப்படும். காலையில் ஒரு முறை மயக்க ஊசி செலுத்திய போது அது தவறியது. யானையால் மனிதர்களுக்கு எந்த வித பிரச்சினையும் இதுவரை ஏற்படவில்லை. யானை சமதள பரப்பிற்கு வரும் வரை காத்திருந்து அதற்கு ரேடியோ காலர் மாட்டப்படும். ரேடியோ காலர் மாட்டினால் அதன் நடவடிக்கைகளை அறிந்து சேதம் ஏற்படுவதை தவிர்க்க முடியும்” என அவர் தெரிவித்தார்.