உணவு கேட்டு கட்டுப்பாட்டு அறைக்கு வந்த போன்கால்... போனை எடுத்த உணவுத்துறை அமைச்சர்!
கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஒருவர் உணவு வேண்டி மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டார். அந்த நபரிடம் உணவு துறை அமைச்சர் சக்கரபாணி உரையாடினார்.
கோவையில் கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை பரவல் தீவிரமடைந்து வருகிறது. தினசரி பாதிப்பில் மாநிலத்தில் முதலிடத்தில் கோவை நீடித்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கோவையில் நேற்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்ட நிலையில், நாளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரடியாக ஆய்வு மேற்கொள்கிறார். இந்நிலையில் கொரோனா தடுப்புப் பணிகளுக்காக நியமிக்கப்பட்ட உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்றனர்.
இதையடுத்து அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.. அப்போது பேசிய அவர், ”கோவை மாநகராட்சி பகுதியில் 18 லட்சம் மக்கள் உள்ளனர். அவர்களுக்கு அடிப்படை தேவைகளான காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவை வீடு தேடிக் கொண்டு செல்வதற்கான பணிகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. மருத்துவ முகாம்கள் மற்றும் பரிசோதனைகள் முகாம்கள் அமைக்கப்பட்டு வருகிறது. நாளை கோவையில் முதலமைச்சர் தலைமையில் ஆய்வுப் பணிகள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ளது. கோவையில் கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்து வந்த கொரோனா, நேற்று 800 பேர் என்ற விதத்தில் குறைந்துள்ளது. பொதுமக்கள் தவிர்க்க முடியாத காரணத்திற்கு மட்டுமே வெளியே வரவேண்டும். பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கொரோனா கட்டுப்படுத்த முடியும். மாநகராட்சி பகுதியில் மட்டும் தினசரி 1500க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தடுப்பூசி மையங்களில் தொடர்ந்து அதிகளவில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு தங்குதடையின்றி காய்கறிகள் கிடைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்ய்யப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்புப் பணிகளுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர்கள் சக்கரபாணி மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்ட பொதுமக்களிடம் நேரடியாக அமைச்சர்கள் பேசினர். அப்போது கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஒருவர் உணவு வேண்டி மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டார். அந்த நபரிடம் உணவு துறை அமைச்சர் சக்கரபாணி உரையாடினார்.
”நான் உணவு துறை அமைச்சர் பேசுறங்க. சக்கரபாணி. எந்த தெருவில் உள்ளீர்கள்?. எத்தனை பேர் இருக்கீங்க அங்க?. சாப்பாட்டுக்கு என்ன செய்யுறீங்க?” என அமைச்சர் சக்கரபாணி கேட்டார். அதற்கு பதிலளித்த அந்த நபர் இரண்டு வேளை உணவு தருமாறு வேண்டுகோள் விடுத்தார். இதற்கு “இன்று இரண்டு வேளை உணவு தருகிறோம். நாளை முதல் 3 வேளையும் உணவு கொடுக்க சொல்கிறோம். கண்டிப்பாக செய்கிறோம். தைரியமாக இருங்கள்” என அவர் பதிலளித்தார். இதையடுத்து உடனடியாக மாநகராட்சி மூலம் உணவு கொண்டு செல்ல உத்தரவு பிறப்பித்தார்.