இளம் குற்றவாளிகள் உருவாவதை தடுக்க வீதிதோறும் நூலகம் - கோவை காவல்துறை முன்னெடுப்பு
கோவையில் இளம் குற்றவாளிகள் உருவாவதை தடுக்கும் விதமாக கோவை மாநகர காவல் துறை சார்பில் வீதிதோறும் நூலகம் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
![இளம் குற்றவாளிகள் உருவாவதை தடுக்க வீதிதோறும் நூலகம் - கோவை காவல்துறை முன்னெடுப்பு The Coimbatore Police Department has launched a street-to-street library to prevent the development of juvenile delinquents இளம் குற்றவாளிகள் உருவாவதை தடுக்க வீதிதோறும் நூலகம் - கோவை காவல்துறை முன்னெடுப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/13/28fa244f76d9de93cb427485e4c467ee1665659577754188_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவை மாநகர காவல் துறை சார்பில் காவல் துறைக்கும், பொது மக்களுக்குமான உறவை பலப்படுத்த பல்வேறு முன்னெடுப்புகள் நடைபெற்று வருகிறது. அதேபோல குழந்தைகளை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும், காவல் துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்ற நோக்கிலும், வாசிப்பு தன்மையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் முயற்சியில் வீதி தோறும் நூலகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மக்கள் நெருக்கமான குடியிருப்பு பகுதி மற்றும் குடிசைப் பகுதியில் உள்ள குழந்தைகள் தங்கள் ஓய்வு நேரத்தில் புத்தகங்களை வாசிக்க ஏதுவாக வீதி தோறும் நூலகம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று பீளமேடு ஜி.ஆர்.ஜி தொண்டு நிறுவனத்துடன் இணைந்து 30 வீதிதோறும் நூலங்கள் அமைப்பதற்கான திட்டத்தை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் துவங்கி வைத்தார். கோவை மாநகரில் குனியமுத்தூர், ஆசாத் நகர், கரும்புக்கடை, கண்ணப்பன் நகர், கணபதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இத்திட்டம் துவங்கப்பட்டது. இந்த நூலகங்களில் 200க்கும் மேற்பட்ட கதை, அறிவியல், பொழுதுபோக்கு சார்ந்த நூல்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த துவக்க நிகழ்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கூறும்போது, ”இளம் குற்றவாளிகள் உருவாவதை தடுக்கவும், குழந்தைகளை மாலை நேரங்களில் ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுத்தவும் கோவையில் வீதிதோறும் நூலகம் என்ற திட்டத்தை முன்னெடுத்துள்ளோம். முக்கியமாக குடிசைப்பகுதிகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் எல்லாம் ஒவ்வொரு தெருவிலும் ஒரு நூலகம் என்ற அடிப்படையில் இன்று 30 இடங்களில் இந்த புத்தக அலமாரி கொடுத்துள்ளோம். ஒவ்வொரு இடத்திலும் 200 புத்தகங்கள் உள்ளன. அனைத்தும் குழந்தைகளுக்கான புத்தகங்கள். அவர்களின் வாசிப்பு ஆர்வத்தை தூண்டும் விதமான புத்தகங்கள் தேர்வு செய்து வைக்கப்பட்டுள்ளன. இந்த 30 இடங்கள் மட்டுமல்லாமல் மொத்தமாக 50 இடங்களில் தனியார் கல்லூரி சார்பில் இந்த நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
குழந்தைகளின் கற்பனைத்திறனை தூண்டக்கூடிய மற்றும் ஆர்வத்தை அதிகரிக்கும் புத்தகங்களான காமிக்ஸ், நீதிக்கதைகள், கார்டூன் படங்கள் இடம்பெற்றுள்ளன. போதை பொருட்கள் போன்ற தவறான பழக்கங்களுக்கு சென்றுவிடாதபடி இருப்பதற்காக இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த தெருவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் இந்த நூலகத்தை பராமரிப்பார். புத்தகங்களை குழந்தைகள் வீட்டிற்கு எடுத்துக் கொண்டு போய் படிக்கலாம். கொரோனா காலங்களில் குழந்தைகள் செல்போனில் மூழ்கியிருந்தனர். தற்போது இந்த திட்டத்தால் அவர்களின் மனநிலை மாறியுள்ளது. குழந்தைகளாய் இருக்கும் போதே வாசிப்பு பழக்கத்தை கொண்டு வர வேண்டும் என்ற அடிப்படையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இது மாணவர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆட்டோ நூலகம் தொடங்கப்பட்டது. அதே போல் டாக்சி நூலகமும் கொண்டு வரும் திட்டம் உள்ளது” எனத் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)